சென்னை: “எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வச்சோம்” பாடல் வரியெல்லாம் மாரி செல்வராஜை பாதிக்கவில்லையா? தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற “போற்றி பாடடி பெண்ணே” பாட்டு மட்டும் தான் பாதித்ததா? என கமல் ரசிகர்கள் மாரி செல்வராஜை விளாசி வருகின்றனர்.
தேவர் மகன் படத்தை இயக்கிய இயக்குநர் பரதன், போற்றி பாடடி பெண்ணே பாடலை எழுதிய வாலி மற்றும் அந்த படத்திற்கு இசையமைத்த இளையராஜா பற்றியெல்லாம் பேசாமல் கமலை மட்டும் மேடையில் வைத்துக் கொண்டே மாரி செல்வராஜ் வம்பிழுத்தது ஏன் என தினமும் பல ட்ரோல்களை பதிவிட்டு வச்சு செய்து வருகின்றனர்.
“கிச்சான்னாலே இளிச்சவாயன் தானா” என்கிற ரேஞ்சுக்கு கமல் ஹேட்டர்களும் ஏகப்பட்ட போட்டோ மீம்களை போட்டு சோஷியல் மீடியா சண்டையை உருவாக்கி வருகின்றனர்.
இசக்கி எந்த சாதி: இசக்கியம்மன், இசக்கியப்பன் என ஊர் மக்கள் சிறு தெய்வங்களாகவே வணங்கி வரும் இசக்கி என்கிற பெயரைத்தான் தேவர் மகன் படத்தில் வடிவேலுவுக்கு வைத்திருப்பார்கள்.
தேவர் மகன் படத்தில் இடம் பெற்ற இசக்கி கதாபாத்திரம் மாமன்னன் ஆனால், எப்படி என்பது தான் இந்த படம் என மாரி செல்வராஜ் பேசிய நிலையில், இசக்கியை பட்டியலின ஜாதியாக படத்தில் எங்கேயும் காட்டி இருக்க மாட்டார்கள் என்றும் கோயில் பூட்டையே உடைப்பேன் என சொல்லும் அளவுக்கும் அரிவாளை எடுத்து வெட்டும் அளவுக்கு வெறிகொண்ட வீரனாகவே அவரது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டு இருக்கும் என்றும் சோஷியல் மீடியாவில் மாரி செல்வராஜுக்கு பல நெட்டிசன்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.
வாலி அந்த வரிகளை எழுத காரணம் என்ன?: தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற “போற்றிப் பாடடி பெண்ணே” பாடலை வாலி எழுத காரணமே தேவர் அவருக்கு செய்த நன்றியை மறவாமல் இருக்க வைத்த வரிகள் தான் என்றும், வாலி எழுதிய வரிகளை கமல் நினைத்தால் கூட மறுத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறுகின்றனர்.
அந்த பாடலை வைத்து சாதிய மோதல்கள் நடந்த வரலாறுகளையும் யாரும் மறுக்கவில்லை என்றும் அந்த பாடலுக்காக தான் மன்னிப்பு கோறுவதாகவும் கமல்ஹாசன் பல முறை பேட்டிகளில் கூறியுள்ளார்.
மன்னிப்பு கேட்ட கமல்: மறைந்த வாலி மற்றும் அந்த பாடலுக்கு இசையமைத்த இளையராஜா என அனைவர் சார்பாகவும் தான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என கமல் பேசிய வீடியோ பேட்டிகளும் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
மற்ற நடிகர்களையும் மற்ற சினிமா பிரபலங்களையும் விட்டு விட்டு கமல்ஹாசனை மட்டும் மாரி செல்வராஜ் டார்கெட் செய்ததற்கு பின்னணியில் பலமான அரசியல் வன்மம் இருக்கு என்றும் அவர் வெறும் உணர்ச்சிவசப்பட்டு பேசவில்லை என்றும் கமல் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.