குண்டர் சட்டத்தில் வருகிறது முக்கிய திருத்தம்.. அதிகாரம் யாருக்கு? – ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்!

மதுரை: குண்டர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள உயர் நீதிமன்றத்தில் உள்துறை செயலர் அவகாசம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்தார். சட்டத் திருத்தம் மேற்கொள்ள 4 வார கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து விரைவில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகராஜ் என்பவர், தன் மகன் தமிழழகன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால், குண்டர் சட்ட உத்தரவுகளில் ஐஜி அல்லது மாநகர் காவல் ஆணையர்கள் கையெழுத்திடும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதா என்பது பற்றி அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குண்டர் சட்டத்தில் திருத்தம்: இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உள்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், “உயர் நீதிமன்ற பரிந்துரை அடிப்படையில் 1982ஆம் ஆண்டி்ன் சட்டம் 14-ல் பிரிவு 3 (2)-ல் திருத்தம் செய்வது அரசின் பரிசீலனையில் உள்ளது. இதனால் 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கோரப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், “குண்டர் சட்ட உத்தரவில் கையெழுத்திடும் அதிகாரத்தை மாநகர் காவல் ஆணையர்கள் மற்றும் ஐஜிக்களுக்கு வழங்குவது தொடர்பாக தேவையான சட்டத் திருத்தம் கொண்டு வர 4 வார கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த கால அவகாசத்திற்குள் சட்டத் திருத்தம் மேற்கொண்டு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.

Court order to file report on goondas act amendment: TN government to amend law

குண்டர் சட்டம் என்றால் என்ன?: கொடும் குற்றங்களை செய்பவர்களையும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களையும் ஓராண்டு சிறையில் அடைத்து வைக்க குண்டர் சட்டம் காவல்துறையினரால் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர் தொடர் குற்றங்களில் ஈடுபடுவார் என சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரி கருதும்போது, அவர் மீது குண்டர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பரிந்துரை செய்வார்.

அதிகாரம் யாருக்கு?: விசாரணை அதிகாரி கொடுக்கும் குற்றச்சாட்டுகளைப் பரிசீலித்து மாவட்ட ஆட்சியர் அதில் கையொப்பம் இட்டு அவரை ஓராண்டு குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிடுவார். இதுவே மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தால் மாநகர ஆணையர், குண்டர் சட்ட உத்தரவில் கையொப்பம் இடுவார்.

இதில் தான் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையருக்கு பதிலாக ஐ.ஜிக்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு, குண்டர் சட்ட உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், குண்டர் சட்ட நடவடிக்கை முழுமையாக காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.