மதுரை: குண்டர் சட்ட உத்தரவுகளில் ஆட்சியருக்கு பதிலாக மாநகர் காவல் ஆணையர் மற்றும் ஐஜி கையெழுத்திடும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு பரிசீலித்து வருவதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகராஜ், தன் மகன் தமிழழகன் மீதான குண்டர் சட்டாகத்தை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால், குண்டர் சட்ட உத்தரவுகளில் ஐஜி அல்லது மாநகர் காவல் ஆணையர்கள் கையெழுத்திடும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. உள்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ”உயர் நீதிமன்ற பரிந்துரை அடிப்படையில் 1982-ல் ஆம் ஆண்டி்ன் சட்டம் 14-ல் பிரிவு 3 (2)-ல் திருத்தம் செய்வது அரசின் பரிசீலனையில் உள்ளது. இதனால் 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதிகள், ”குண்டர் சட்ட உத்தரவில் கையெழுத்திடும் அதிகாரத்தை மாநகர் காவல் ஆணையர்கள் மற்றும் ஐஜிக்களுக்கு வழங்குவது தொடர்பாக தேவையான சட்டத் திருத்தம் கொண்டு வர 4 வார கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த கால அவகாசத்திற்குள் சட்டத் திருத்தம் மேற்கொண்டு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.