2021ஆம் ஆண்டு முதலமைச்சர்
தலைமையிலான திமுக அரசு அமைந்ததும், ஒவ்வொரு துறைக்கும் சரியான அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டனர். அதில் உளவுத்துறையும் அடங்கும். மாநிலத்தில் அடுத்து நிகழவிருக்கும் விஷயங்களை முன்கூட்டியே யூகித்து, கண்டறிந்து அரசுக்கு தெரிவித்து எச்சரிக்கையோடு செயல்பட வழிகாட்டும் முக்கிய பொறுப்பு உளவுத்துறையின் கைகளில் இருக்கிறது.
IAS அதிகாரிகள் எண்ணிக்கை குறைய காரணம் இது தான்
யார் இந்த டேவிட்சன் தேவாசீர்வாதம்?
எனவே இதன் தலைமை பொறுப்பை டேவிட்சன் தேவாசீர்வாதம் கைகளில் ஸ்டாலின் ஒப்படைத்தார். இவர் 1995ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் பேட்ச். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த முதலூர் கிராமத்தை சேர்ந்தவர். காவல்துறையில் ஒவ்வொரு படிநிலையாக உயர்ந்து வந்தவர். எஸ்.பி, ஐஜி, ஏடிஜிபி என பதவி உயர்வு பெற்றார். அதிமுக, திமுக என மாறி மாறி ஆட்சி அமைந்த நிலையில் ஆட்சியாளர்களின் குட்புக்கில் தவறாமல் இடம்பிடித்து ஆச்சரியம் அளித்தவர்.
திமுக ஆட்சியில் கோலோச்சியவர்
அந்த வகையில் மு.க.ஸ்டாலினின் தேர்வில் முக்கியமான நபராக இருந்தார். இதற்கு மருமகன் சபரீசனின் சிபாரிசு ஒரு காரணம் என அப்போதே பேசப்பட்டது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகால திமுக ஆட்சியில் காவல்துறையில் பல்வேறு விஷயங்களை கட்டுப்படுத்தும் அளவிற்கு செல்வாக்கு பெற்று விளங்கியதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் கூறினர். அதேசமயம் உளவுத்துறை ஏடிஜிபியாக பல விஷயங்களில் கோட்டை விட்டதாக டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது விமர்சனங்களும் உண்டு.
சறுக்கிய உளவுத்துறை
முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்ட ஏபிவிபி அமைப்பினர், கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தை அடுத்து நிகழ்ந்த மிகப்பெரிய கலவரம், கோவை கார் குண்டுவெடிப்பு, ஓசூர் அருகே நடந்த திடீர் சாலை மறியல் போராட்டம் எனப் பல விஷயங்களில் காவல்துறை கோட்டை விடும் நிலை உண்டானது. இருப்பினும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சென்னை காவல் ஆணையர் பதவி
இந்த சூழலில் டிஜிபி சைலேந்திர பாபு ஓய்வு பெறும் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது. அவரது இடத்திற்கு சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது. எனவே சங்கர் ஜிவால் இடத்தை பிடிக்க டேவிட்சன் தேவாசீர்வாதம் காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்குள் அதிரடி பணியிடமாற்றம் செய்யப்பட்டு சென்னை தலைமையிட ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டு விட்டார்.
போலி பாஸ்போர்ட் முறைகேடு
இது நிச்சயம் ஏமாற்றம் அளித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கிடையில் புதிய சிக்கல் ஒன்று டேவிட்சன் தேவாசீர்வாதத்தை தேடி வந்துள்ளது. 2019 காலகட்டத்தில் மதுரை காவல் ஆணையராக இருந்த போது போலி பாஸ்போர்ட் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் பத்திரிகையாளர் வாராகி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஸ்டாலின் நடவடிக்கை
ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் இதுவரை சிக்கலில் மாட்டாத டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு தற்போது சிக்கல் வந்துள்ளது. பாஸ்போர்ட் முறைகேடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு வந்த புகார் மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக கொண்டு டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கலாம். நேற்று தான் பணியிடமாற்றம் நடந்துள்ளது. இந்த நேரத்தில் நடவடிக்கை பாயுமா? கைது செய்யப்படுவாரா? கிடப்பில் போடுவாரா? போன்ற கேள்விகள் எழுகின்றன.