மகளிர் உரிமைத் தொகை ரூ.1000: யார் யாருக்கு வழங்கப்படும்? பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி?

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பேர் இணைக்கப்பட உள்ள நிலையில் யார் அந்த ஒரு கோடி பேர் எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது குறித்து விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன.

ஸ்டாலின் போடும் கையெழுத்து!திமுக தனது தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்ததும் அதற்கு அதிகமான வரவேற்பு கிடைத்தது. அதைப் பார்த்ததும் அதிமுக 1500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்ததும் முதல்வர் ஸ்டாலின் முதலில் போடும் கையெழுத்துக்களில் இந்த திட்டமும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
செப்டம்பர் 15 முதல் அமல்!பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்கள் உடனடியாக அப்போது அமலுக்கு வந்தன. இருப்பினும் மகளிர் உரிமைத் தொகை எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்து இருந்து வந்தது. தமிழக அரசின் நிதி நிலைமையை காரணம் காட்டி இரு ஆண்டுகளாக தள்ளிப் போடப்பட்டு வந்த அத்திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஒரு கோடி பயனாளர்கள்!சட்டமன்றத்தில் அப்போதைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செப்டம்பர் முதல் இத்திட்டம் அமலுக்கு வருவதாக கூறி 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். இந்த செப்டம்பர் முதல் வரும் மார்ச் வரை உள்ள ஏழு மாதங்களுக்கு இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு மாதத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய். அந்த வகையில் ஒரு கோடி பேர் இந்த திட்டத்தின் பயனாளர்களாகப் போகின்றனர்.
மாவட்ட வாரியாக தயாராகும் பட்டியல்!அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் சமயத்தில் கூறியிருந்தாலும் நிதி நிலைமை, மற்றும் தகுதியானோருக்கே இத்திட்டத்தின் பலன் சென்று சேரவேண்டும் என்பதால் ஒரு கோடி பேர் என்று இதன் பயனாளர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது. அவர்களின் பட்டியலும் மாவட்ட வாரியாக தயாராகிவிட்டதாக சொல்கிறார்கள்.
யாருக்கு வாய்ப்பு இல்லை!இதன் பூர்வாங்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக ஜனவரி மாதமே அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார். அரசு பணிகளில் உள்ளவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்பத் தலைவிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் பணப் பலன் கிடைக்காது என்கிறார்கள். வருமான வரி செலுத்துபவர்கள், சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோரும் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய முடியாதாம்.

குறைந்தபட்ச வயது நிர்ணயம்!​​
மகளிர் உரிமைத் தொகையை பெற வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கோட்டை வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதாவது 30 வயதுக்கு மேற்பட்ட குடும்பத் தலைவிகளே இந்த திட்டத்தில் பயனாளர்களாக சேர்க்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.