புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் முஸ்லிம்களைக் கவர ’மோடி மித்ரா (மோடியின் நண்பன்)’ எனும் பெயரில் பாஜக நாடு முழுவதிலும் சான்றிதழ்களை வழங்குகிறது.
இந்த வகையிலான முதல் கூட்டம், உத்தரபிரதேச மாநிலம் தியோபந்த் நகரில் ஜூன் 22-ல்நடைபெற்றது. இதற்கு, உலகப்புகழ் பெற்ற தாரூல் உலூம் மதரஸா உட்பட நூற்றுக்கணக்கான மதரஸாக்கள் அங்கு இருப்பது காரணம் ஆகும். இங்குள்ள முஸ்லிம்களையும், மவுலானாக்களையும் பாஜக அழைத்திருந்தது.
இதில் பங்கேற்ற முஸ்லிம்களில் முக்கியமானவர்கள் தேர்வு செய் யப்பட்டு அவர்களுக்கு, ‘மோடி மித்ரா’ சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதுகுறித்து பாஜகவின் தேசிய சிறுபான்மையினர் பிரிவு தலைவர் ஜமால் சித்திக்கீ கூறும்போது, “மோடியின் நண்பன் சான்றிதழை பெறுவோர் பாஜகவின் உறுப்பினராக வேண்டிய அவசியமில்லை. இவர்களது ஆதரவை அடித்தளமாக்கி எங்கள் கட்சிக்கு பயன்படுத்தப்படும். மத்திய, மாநிலஅரசுகளின் சிறுபான்மையினருக்கானத் திட்டங்கள் இவர்கள் மூலமாக முஸ்லிம்களுக்கு தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
அடுத்த வருடம் வரும் மக்களவைத் தேர்தலில் பலன் பெறும் வகையில் மோடியின் நண்பன் சான்றிதழ் பெற்றவர்களை பயன்படுத்த கட்சி திட்டமிட்டுள்ளது. உ.பி.யை அடுத்து நாட்டின் இதர மாநிலங்களிலும் படிப்படியாக மோடியின் நண்பன் சான்றிதழை மக்களவைத் தொகுதிக்கு தலா 750 வீதம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக தொழிலதிபர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இவர்களுக்கான மோடியின் நண்பன் சான்றிதழ்களை முஸ்லிம்களுக்கான பாஜக கூட்டங்களில் அதன் முக்கியதலைவர்கள், மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டு விநியோகிப்பார்கள்.
நாடு முழுவதிலும் சுமார் 70- மக்களவை தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்களாக முஸ்லிம்கள் உள்ளனர். அதிகபட் சமாக பாஜக இதுவரையும் 10 சதவீத முஸ்லிம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
காங்கிரஸ் தொடர்ந்து நான்கு தேர்தல்களிலும் சராசரியாக 35 சதவீத முஸ்லிம் வாக்குகளை பெற்று வருகிறது. இச்சூழலில் இரண்டாவது முறையாக அமைந்துள்ள பாஜக தலைமையிலான ஆட்சிக்கு எதிரான வாக்குகள் அதிகரித்து வருவதாக அஞ்சப்படுகிறது.
இதனால், வரும் மக்களவைத் தேர்தலில் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசங்களில் எதிர்க் கட்சிகளை வெல்ல வேண்டி வரும் என பாஜக கருதுகிறது. இதற்காக, முஸ்லிம்களை குறி வைத்து இந்த மோடியின் நண்பன் சான்றிதழை பாஜக விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.