தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அம்மா உணவகங்கள் மட்டுமல்ல, தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. அம்மா உணவகத் திட்டம் என்பது அனைத்து மக்களுக்கும் அன்னபூரணியாக விளங்கியது. இந்தத் திட்டத்துக்குப் போதிய நிதி ஒதுக்காமலும், தேவையான வசதிகளைச் செய்து கொடுக்காமலும் அம்மா உணவகம் மக்களிடம் போதிய வரவேற்பை இழந்துவிட்டது என பொய்யான கட்டுக்கதையை உருவாக்கி அதனை மூடுவதற்கான பணியை தற்போதைய அரசு முன்னெடுத்துச் செல்கிறது.
மக்களின் வயிற்றில் அடிக்கும் பணியை இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது. இதற்கு அ.தி.மு.க கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் நிதி நெருக்கடி எனக் கூறுகின்றனர். இதில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்ந்தால் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். அரசு, மக்களின் வரிப்பணத்தை வீணாகச் செலவு செய்யக் கூடாது. இது தொடர்பாக செந்தில் பாலாஜி குற்றமற்றவர் என நிரூபித்த பின்னர், அவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கியிருக்கலாம்.
பள்ளி மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. மடிக்கணினி வழங்கப்படவே இல்லை. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றால் தமிழகம் பின்னோக்கிச் செல்லும் நிலை ஏற்படும். ’தேவர் மகன்’ திரைப்படம் வந்தபோது சில விமர்சனங்கள் இருந்தாலும், மக்களின் வரவேற்பைப் பெற்றது. தேவர் மகனில் கருந்து வேறுபாடுகள் இருந்திருந்தால் மக்கள் இவ்வளவு பெரிய ஆதரவைத் தந்திருக்க மாட்டார்கள். அது ஜனரஞ்கமான படமாக அமைந்தது. இன்றைக்கு உள்ள சூழலில் சாதி மத மோதல்களைத் தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்கத்தக்கது.
’மாமன்னன்’ திரைப்படத்தில் சாதி மோதலைத் தூண்டும்படியான கருத்துகள் இருந்தால், படக்குழுவினர் அதனை ஆராய்ந்து நீக்க வேண்டும். இதற்காக ஏற்கெனவே வெளியான பழைய படங்களை ஒப்பிட்டுப் பேசுவது சரியான தீர்வாக இருக்காது. தற்போது வரை அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணியிலேயே தொடர்கிறது. சிறந்த பிரதமர் நரேந்திர மோடிதான் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது என்பது அ.தி.மு.க-வின் நிலைப்பாடு. அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணிக்குள் எந்த முரண்பாடும் இல்லை” என்றார்.