‘மாமன்னன்’ படத்துக்கு  இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “உதயநிதியை நாயகனாக நடிக்க, நாயகிகளாக நடிகைகள் ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடிக்க, இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு, 2018-ம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியதாகவும், 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது.

இருபது சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் படத்தில் நடித்துள்ள உதயநிதி, அந்த படமே தனது கடைசி படம் என கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏஞ்சல் படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், ஏஞ்சல் படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் தமக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி, இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால், ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டுமெனவும், 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். அதுவரை மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன் ஏறகெனவே விசாரணைக்கு வந்தபோது, ரெட் ஜெயிண்ட் மூவிஸ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என கேட்டதையடுத்து வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஏற்கெனவே 80 சதவீத பணிகள் முடிந்துவிட்டது என்றும், எட்டு நாட்கள் மட்டும் தங்களுக்கு நடித்து கொடுக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் . சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டதால் அரசியலில் மும்மரமாகிவிட்டதாக குறிப்பிட்டார்.

மாமன்னன் தனது கடைசி திரைப்படம் என்று உதயநிதி குறிப்பிட்டுள்ளதாக வாதிட்டார். ரெட்ஜெயினட் மூவிஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ரெட் ஜெயின்ட் மூவிஸ் லிமிட்டெட் கூட்டு நிறுவனம் மூலம் மாமன்னன் திரைப்படம் தயாரிக்கப்பட்டதாகவும், ஏஞ்சல் திரைப்படத்திற்கு வாய்மொழி ஒப்பந்தம் மட்டும்தான், அதுவும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்திடம்தான் என்றும் வாதிட்டார். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தில் உதயநிதி ஸ்டாலின் பாட்னர் இல்லை என்றும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டார். ஏஞ்சல் திரைப்படத்தில் உதயநிதி நடித்து தருவது குறித்து பின்னர் உத்தரவிடப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.