ராய்பூர்: சத்தீஸ்கர் மாநில துணை முதல்வராக டி.எஸ்.சிங் டியோ காங்கிரஸ் தலைமையால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைமை இந்த முடிவை எடுத்துள்ளது.
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. மொத்தம் 90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பூபேஷ் பாகேல் உள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால், அம்மாநிலத்துக்கு இந்தாண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சி முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், தேர்தல் வியூகங்கள் குறித்தும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மாநில பொறுப்பாளர் குமரி செல்ஜா, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கட்சியின் சத்தீஸ்கர் பிரிவு தலைவர் மோகன் மார்க்கம் மற்றும் டிஎஸ் சிங் தியோ உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இன்றைய கூட்டத்தின்போது, சத்தீஸ்கர் தேர்தலில் காங்கிரஸின் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், கட்சித் தலைவர்களிடையே நிலவும் உரசல் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில துணை முதல்வராக டிஎஸ் சிங் தியோவை நியமிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சத்தீஸ்கர் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள டி.எஸ் சிங் டியோ, தற்போது சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சராகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள டி.எஸ் சிங் டியோவுக்கு சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதில் இருந்தே டிஎஸ் சிங் தியோவுக்கும், முதல்வர் பூபேஷ் பாகேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. தனக்கு தலைமை முக்கியத்துவம் தரவில்லை என சிங் டியோ அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரது அதிருப்தியை போக்கும் வகையில் துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு துணை முதல்வர் பதவியை அளித்து, மாநிலத்தில் கட்சிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாட்டை தீர்க்கும் நோக்கில் காங்கிரஸ் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.