திருவனந்தபுரம்:பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அப்துல்நாசர் மதானி 57, கொல்லம் வரும் வழியில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி. கொல்லம் சாஸ்தாங்கோட்டையை சேர்ந்த இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூருவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது ஜாமின் மனு பல முறை தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தந்தையை சந்திக்க செல்ல மதானிக்கு உச்சநீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியது. ஆனால் பாதுகாப்பு செலவினங்களுக்காக 54.63 லட்சம் ரூபாய் முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்று கர்நாடகா போலீஸ் கூறியது. இந்த தொகையை குறைக்க கோரி மதானி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பலத்த பாதுகாப்புடன் விமானம் மூலம் கொச்சி வந்த மதானி, காரில் கொல்லம் புறப்பட்டார். கொச்சி இடப்பள்ளி அருகே அவருக்கு உயர் ரத்த அழுத்தம், வாந்தி ஏற்பட்டதை தொடர்ந்து கொச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் உடல் நலம் சீராக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement