Mamannan – மாமன்னன் திரையிட்டால் தாக்குதல்.. வந்தது முதல் மிரட்டல்

தேனி: Maamannan (மாமன்னன்) மாமன்னன் திரைப்படத்தை திரையிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என அகில இந்திய ஃபார்வேர்டு ப்ளாக் கட்சி மிரட்டல் விடுத்திருக்கிறது.

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கியிருக்கும் மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். அவருடன் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஜூன் 29ஆம் தேதி (நாளை) ரிலீஸாகவிருக்கிறது. உதயநிதிக்கு இது கடைசி படம் என்பதால் அவரது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஆடியோ வெளியீட்டு விழா: மாமன்னன் படத்துக்கான சூழல் சுமூகமாக இருந்த நிலையில் அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தேவர் மகன் பற்றி கமல் ஹாசனை வைத்துக்கொண்டே மாரி செல்வராஜ் பேசிய பேச்சு, 13 வருடங்களுக்கு முன்னர் தேவர் மகன் குறித்து அவர் எழுதிய கடிதம் ஆகியவைகளை பிரச்னைகளை பற்ற வைத்தன.

என்ன பேசினார்?: விழாவில் பேசிய மாரி செல்வராஜ், “தேவர் மகன் படம் எனக்கு பெரிய மனப்பிறழ்வை உருவாக்கிய படம். நடப்பதெல்லாம் ரத்தமும் சதையுமாக இருந்தது. இதை எப்படி நான் புரிந்துகொள்வது. இந்தப் படம் சரியா, தப்பா என்பதை புரிந்துகொள்ள முடியாத ஒரு வலி. தேவர் மகனில் இருக்கும் இசக்கி மாமன்னன் ஆனால் என்ன ஆகும் என்பதுதான் மாமன்னன் படம்” என பல விஷயங்களை பேசினார்.

மாரியை வெளுத்த ரசிகர்கள்: இதனையடுத்து இந்தப் பிரச்னை சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தேவர் மகனை மாரி செல்வராஜ் புரிந்துகொள்ளவே இல்லை. அந்தப் படம் இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்னையைத்தான் பேசியதே தவிர இரண்டு சாதிகளுக்கு இடையிலான பிரச்னையை பேசவில்லை. ரொம்ப முக்கியமாக படத்தில் வரும் இசக்கி கதாபாத்திரம் ஒடுக்கப்பட்டவர்களை சேர்ந்த கதாபாத்திரம் இல்லை என கூறினர்.

எமோஷனல் தருணம்: பிரச்னை முற்றுவதை கவனித்த மாரி செல்வராஜ் நான் அந்த மேடையில் ரொம்பவே எமோஷனலாக பேசிவிட்டேன். உண்மை என்னவென்று கமல் ஹாசனுக்கும் எனக்கும்தான் தெரியும். மற்றவர்கள் நினைப்பதை பற்றி கவலை இல்லை என்று கூறினார். அதோடு இந்தப் பிரச்னை முடிந்துவிடும் என பலரும் நினைத்தனர்.

தாக்குதல்: ஆனால் இப்போது புதிய பிரச்னை எழுந்திருக்கிறது. அதாவது மாமன்னன் திரைப்படத்தை திரையிட்டால் தாக்குதல் நடத்துவோம் என தேனி வெற்றி திரையரங்கத்துக்கு அகில இந்திய ஃபார்வேர்டு ப்ளாக் கட்சி வெளிப்படையாக மிரட்டல் விடுத்திருக்கிறது. இதுதொடர்பாக அந்தத் திரையரங்க மேலாளரிடம் மனு ஒன்றையும் அக்கட்சி அளித்திருக்கிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மாரி செல்வராஜ் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கலாம், எதிர்ப்பை தெரிவிக்கலாம். ஆனால் தாக்குதல் நடத்துவோம் என மிரட்டுவது எந்தவகையில் ஏற்றுக்கொள்ள முடியாதது என பலரும் அக்கட்சிக்கு எதிராக பேசிவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.