சென்னை:
தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் ஒரு பொதுக்கழிப்பிடம் கூட இல்லாதது பயணிகளை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறது. இதனால் பெண்கள், நோயாளிகள், வயதானவர்கள் ஆகியோர் தினம் தினம் வெளியே சொல்ல முடியாத அவஸ்தைகளை அனுபவித்து வருகின்றனர்.
திருவள்ளூர், திருத்தணி தொடங்கி சென்னையின் மேற்கு புறநகர் பகுதிகளை நகரின் இதயப்பகுதியோடு இணைப்பது சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம்தான்.
மூர் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையத்துக்கு தினமும் லட்சக்கணக்கானோர் வியாபாரம், அலுவலகம், கல்லூரி, வேலை என பல்வேறு விஷயங்களுக்காக வந்து செல்கின்றனர். காலை 5 மணி தொடங்கி இரவு 11 மணிக்கு மேலே கூட இங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக ரயிலில் வருவதையும் செல்வதையும் நாம் பார்க்க முடியும்.
பொதுக்கழிப்பிடம் இல்லை:
இத்தனை பயணிகள் வந்து செல்லும் ஒரு முக்கியமான இடத்தில் ஒரு கழிவறை கூட இல்லை என்பதே ஒட்டுமொத்த மக்களும் சொல்லும் புகாராக உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் முதலில் 12-வது நடைமேடையில் ஒரு பொதுக்கழிப்பிடம் இருந்தது. ஆனால், டிக்கெட் கவுன்ட்டருக்கு பின்னால் புதிய பொதுக் கழிப்பிடம் திறக்கப்பட்ட பின்னர், பழைய கழிப்பிடம் மூடப்பட்டது. ஆனால் தற்போது பராமரிப்புப் பணிகளுக்காக இருக்கின்ற ஒரு கழிப்பிடமும் மூடப்பட்டுவட்டது.
தினமும் அவஸ்தை:
இதனால் ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும பயணிகள் படும் அவஸ்தை சொல்லில் அடங்காது. குறிப்பாக, பெண்கள், சிறார்கள், முதியவர்கள், நோயாளிகள் ஆகியோர் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் அதிலும், சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீர் வரும் என்பதால் அவர்களின் பாடு இன்னும் கஷ்டம். இதனால் பயணிகள் ரயில் நிலையத்துக்கு வெளியே நீண்டதூரம் நடந்து சென்றே இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டியுள்ளது.
மக்கள் கோரிக்கை:
ரயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் கட்டணக் கழிப்பிடம் உள்ள போதிலும், சிலர் மட்டுமே அதை உபயோகப்படுத்த முடிகிறது. சரியான சில்லறை இல்லாதவர்களும், ஏழை எளிய மக்களும் இதை உபயோகப்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே மக்களின் சிரமத்தை புரிந்துகொண்டு சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் விரைவில் பொதுக்கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ரயில்வே விளக்கம்:
பராமரிப்புப் பணி நிறைவடைய தாமதம் ஏற்படும் என்றால் தற்காலிகமாகவாவது ஒரு பொதுக்கழிப்பிடத்தை அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து சென்னை மண்டல ரயில்வே உயரதிகாரி கூறுகையில், “பராமரிப்புக் காரணங்களால்தான் பொதுக்கழிப்பிடம் மூடப்பட்டுள்ளது. ஜூலை இரண்டாம் வாரத்துக்குள் பொதுக்கழிப்பிடம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும்” என்றார்.