கர்நாடக பாணியில் ம.பி.-யில் ‘போன் பே’ போஸ்டர் பிரச்சாரம்: காங்கிரஸுக்கு ‘போன் பே’ நிறுவனம் எச்சரிக்கை

போபால்: மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுகான் ஊழல் செய்திருப்பதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் கட்சி ஒட்டியுள்ள போஸ்டர்களில் தங்களது பிராண்ட் ‘லோகோ’ பயன்படுத்தப்படிருப்பதற்கு ‘போன் பே’ நிறுவனம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் தங்களின் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதன் விளைவாக இரண்டு கட்சிகளுக்கும் இடையில் மாநிலத்தில் போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது. இரு கட்சிகளும் எதிர்தரப்பின் முக்கியத் தலைவர்களின் படங்களை போட்டும், விமர்சித்தும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றன.

அந்த வகையில், மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி, அமாமாநில முதல்வர் சிவராஜ் சவுகான் ஊழல் செய்திருப்பதாக குற்றம்சாட்டி, மாநிலம் முழுவதும் அவரது படத்தை போட்டு போஸ்டர் ஒட்டியுள்ளது. அவை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் போஸ்டரில், ஆன்லைனில் பணம் செலுத்த பயன்படுத்தப்படும் க்யூஆர் கோடில் முதல்வர் சிவராஜ் சவுகானின் படம் இடம்பெற்றுள்ளது. அதன் மேலே ‘போன் பே’ என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. மேலும் அதில் “இங்கே 50 சதவீதம் கமிஷன் செலுத்தி உங்களது வேலையை முடித்துக் கொள்ளுங்கள்” என்றும் எழுதப்பட்டுள்ளது.

‘போன் பே’ எதிர்ப்பு: இதுகுறித்து டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நிறுவனமான ‘போன் பே’ தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “எந்த ஓர் அரசியல் கட்சியோ அல்லது அரசியல் சாராத மூன்றாவது நபர்களோ யாரும் எங்களது லோகோவை அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தக் கூடாது. போன் பே லோகோ எங்கள் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வணிக முத்திரையாகும். ‘போன் பே’-யின் அறிவுசார் சொத்து உரிமைகளை அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் நிறுவனத்தின் பிராண்ட் மற்றும் லோகோவுடன் இருக்கும் போஸ்டர்களை நீக்கும்படி மத்தியப் பிரதேச காங்கிரஸை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

பாஜக எதிர்வினை: இந்தப் போஸ்டர்கள் குறித்து மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறுகையில், “காங்கிரஸ் கட்சியின் அழுக்கு அரசியல் வெளியே வந்துள்ளது. ‘போன் பே’ ட்வீட்டுக்குப் பின்னர் எதுவும் சொல்வதற்கில்லை. உங்களுடைய ஊழலை மறைக்க நீங்கள் மற்றவர்கள் மீது குறை கூறுகிறீர்கள் என்று மக்கள் அறிவார்கள். இதற்கு எதிராக புர்ஹான்பூர் மற்றும் சிந்த்வாராவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கமல்நாத்துக்கு எதிராக போஸ்டர்: கடந்த வாரத்தில் மத்தியப் பிதேச முன்னாள் முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான கமல்நாத்துக்கு எதிராக மாநிலத்தில் நடந்த பல்வேறு ஊழல்களுடன் தொடர்புபடுத்தி ‘வான்டட் ஊழல்நாத்’ என்று போஸ்டர் போபால் முதலான பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்ததது. இதனால், இந்தப் போஸ்டர் போரை பாஜகதான் தொடங்கியது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது. இத்தகைய போஸ்டர்களை தாங்கள் ஒட்டவில்லை என்று மறுத்திருந்த பாஜக, அது காங்கிரஸின் உட்கட்சி பூசலின் விளைவு என தெரிவித்திருந்தது.

கர்நாடகா ஃபார்முலா: மத்தியப் பிரதேசத்தில் நடந்துவரும் இந்தப் போஸ்டர் போர், சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், அம்மாநில முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எதிராக காங்கிரஸ் கடைபிடித்த போஸ்டர் பிரச்சாரத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. அங்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சி, பாஜக முதல்வர் பசவராஜின் படத்தைப் போட்டு 40 சதவீத கமிஷன் சர்க்கார் என்றும், பே சிஎம் என்றும் போஸ்டர் ஒட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.