அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 13 ஆம் தேதி இரவு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நள்ளிரவில் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் 4 இடங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனைக்கு உயர்நீதிமன்ற அனுமதியுடன் மாற்றப்பட்டார்.
கடந்த 21 அம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும் மது விலக்கு மற்றும் ஆயர்தீர்வை துறை அமைச்சர் முத்துச்சாமியிடமும் ஒப்படைக்கப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.
ஆனால் செந்தில் பாலாஜி மீது குற்றவழக்குகள் இருப்பதால் அவரை இலாகா இல்லாத அமைச்சராக அனுமதிக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்நலையில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர் அமைச்சராக நீடிப்பது அவர் மீதான வழக்குகளை விசாரிக்க இடையூறாக இருக்கும் என்றும் அவர் அமைச்சர் பதவியில் நீடிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என கூறி அவரை பதவி நீக்கம் செய்துள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து பேசியுள்ளார்.
சற்று முன் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு ஆளுநர் அதிகாரம் இல்லை என கூறியுள்ளார். மேலும் இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.