சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்குமாறும், ஜூன் 28-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
பிறகு செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அமலாக்கத் துறையினர் 8 நாட்களுக்கு செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையிலேயே வைத்து விசாரணை நடத்த முதன்மை அமர்வு நீதிபதி அனுமதி அளித்திருந்தார். ஆனால், அவரை மருத்துவமனையில் வைத்து விசாரணை நடத்த முடியவில்லை என்று நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கான நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அவர் நேற்று மாலை காணொலிக் காட்சி வாயிலாக தனியார் மருத்துவமனையில் இருந்து, நீதிமன்ற விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவரிடம் முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, ‘‘இப்போது எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு செந்தில் பாலாஜி, ‘‘இன்னும் கொஞ்சம் வலி இருக்கிறது’’ என்றார்.
இதையடுத்து, செந்தில் பாலாஜிக்கான நீதிமன்றக் காவலை வரும் ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.