சென்னை: செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யும் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி கடிதம் அனுப்பியுள்ளார். ஆளுநரின் இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்ற பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.
பணமோசடி வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதிஅமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 12ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இலாகா இல்லாத அமைச்சர்: இதற்கிடையே, செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பு வகித்த இலாகாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மற்றும் முத்துச்சாமி ஆகியோரிடம் பிரித்துக் கொடுத்தார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து வந்தார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக அதிரடி காட்டினார் ஆளுநர் ரவி. நேற்று (ஜூன் 19) ராஜ்பவனில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “செந்தில் பாலாஜி பணமோசடி உள்ளிட்ட பல ஊழல் வழக்குகளில் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்கிறார். அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, விசாரணையில் செல்வாக்கு செலுத்தி, நீதி வழங்கப்படுவதைத் தடுக்கிறார்.
செந்தில் பாலாஜி நீக்கம்: தற்போது, அமலாக்கத்துறை விசாரித்து வரும் குற்ற வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ளார். அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மேலும் சில குற்ற வழக்குகள் மாநில காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிப்பது நியாயமான விசாரணை உட்பட சட்டத்தின் சரியான செயல்முறையை மோசமாக பாதிக்கும். எனவே ஆளுநர் ரவி செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார்.” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை, அரசியலமைப்புச் சட்டத்தை ஆளுநர் காலில் போட்டு மிதிக்கிறார் என திமுக தரப்பில் கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மேலும், முதல்வர் ஸ்டாலினும், ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை, இதனை சட்டரீதியாக சந்திப்போம் எனத் தெரிவித்தார்.
சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்: ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து, ஆளுநர் ரவியின் முடிவுக்கு எதிராக சட்டப்பூர்வமான வழியில் செல்வதாக கூறியதையடுத்து ஆளுநர் பிறப்பித்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிப்பதாக, ஏ.என்.ஐ, பிடிஐ ஆகிய முன்னணி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியை விட்டு நீக்கி ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ள நிலையில், மத்திய அரசுடனான ஆலோசனைக்குப் பிறகு, தனது முந்தைய உத்தரவை வாபஸ் பெற ஆளுநர் ரவி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிக்கல் வரும்: தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், இந்த விஷயத்தில் ஆளுநர் தரப்புக்கு ஏற்படக்கூடிய சங்கடங்களைத் தவிர்க்கவே, இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமாக உள்ள சிக்கல்கள் குறித்து விவாதித்து, ஆலோசனை பெறுமாறு ஆளுநருக்கு மத்திய அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிறுத்தி வைப்பு ஏன்?: அதன் அடிப்படையிலேயே, ஆளுநர் ரவி, அட்டர்னி ஜெனரலிடம் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குவது பற்றி சட்டப்பூர்வ ஆலோசனை கோரியுள்ளதாகவும், அதுவரை தனது முந்தைய உத்தரவை நிறுத்தி வைக்க முடிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைக்கும் முடிவை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மற்றொரு கடிதம் வாயிலாக ஆளுநர் ரவி தெரியப்படுத்தி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அட்டர்னி ஜெனரலின் ஆலோசனைப்படி ஆளுநரின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் எனத் தெரிகிறது.