சென்னை: தமிழகத்தின் தலைமைச் செயலராகப் பொறுப்பு வகிக்கும் வெ.இறையன்பு நாளை (ஜூன் 30) ஓய்வு பெறுவதையடுத்து, 49-வது தலைமைச் செயலராக, தற்போது நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் சிவ்தாஸ் மீனா நியமிக்கப்படுகிறார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது.
2021-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, மே 7-ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்றே மாநில தலைமைச் செயலராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் அவர் தலைமைச் செயலராகப் பணியாற்றிய நிலையில் நாளை ஒய்வு பெறுகிறார்.
அவர் ஓய்வுபெறும் சூழலில், புதிய தலைமைச் செயலர் யார் என்பது தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் முதல் நிலையில் உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர் மற்றும் சிவ்தாஸ் மீனா ஆகியோரது பெயர்கள் மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தற்போது நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் சிவ்தாஸ் மீனாவை, தமிழகத்தின் தலைமைச் செயலராக நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்து, அதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், புதிய தலைமைச்செயலராக சிவ்தாஸ் மீனாவை நியமிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.