சென்னை: வெளிச்சந்தைகளில் தக்காளி அதிக விலைக்கு விற்பனை செய்வது நீடித்தால், தமிழகத்தில் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரத்து குறைவால் தக்காளி விலை கிலோ ரூ.100-ஐ தாண்டி விற்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, தக்காளி விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளியை கொள்முதல் விலைக்கே விற்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் கீழ், தேனாம்பேட்டையில் செயல்பட்டு வரும் பண்ணைபசுமை நுகர்வோர் கடையில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தக்காளி விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் நிலவியதால், விவசாயிகள் தக்காளி பயிரிடுவது கணிசமாக குறைந்தது. மேலும், அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்தும் குறைந்துள்ளது. இதனால், கடந்த வாரம் முதல் தக்காளி விலை அதிகரித்துள்ளது.
தினசரி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 800 டன் வரை வரக்கூடிய தக்காளி தற்போது 300 டன் மட்டுமே வருகிறது. இதனால் வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், முதல்வர் அறிவுறுத்தல்படி, கூட்டுறவுத் துறையின் மூலம் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 62 பண்ணை பசுமை நுகர்வோர் பசுமைக் கடைகள், 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்கப்பட்டு வருகிறது.
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் இன்று முதல் குறைந்தபட்சமாக தக்காளி ஒரு கிலோ ரூ.60 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையுடன் ஒப்பிடும்போது விலை ரூ.30 முதல் ரூ.40 வரை குறைவாகும்.
திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் கீழ் தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம், கீழ்ப்பாக்கம், பெரியார் நகர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், அம்மா உணவகத்துக்கும் தனியாக தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு, வழங்கப்பட்டுள்ளது. தக்காளி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
சட்டவிரோதமாக தக்காளியைப் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிலை நீடித்தால், தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன்கடைகள் மூலம் தக்காளி விற்பனையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.