புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், காவல்துறையின் மிக முக்கிய பதவியான அதைக் கைப்பற்ற பலரும் காய் நகர்த்திய நிலையில் சங்கர் ஜிவாலின் பெயரே முன்னணியில் இருப்பதாகவும் இன்று அல்லது நாளை காலை இது தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கூறுகிறார்கள்.
சைலேந்திரபாபு பணிக்காலம் எப்படி இருந்தது?முதல்வராக ஸ்டாலின் முதன்முறையாக பதவியேற்ற போது அதிகாரிகள் தேர்வில் மிகவும் கவனமாக இருந்தார். பார்த்து பார்த்து ஒவ்வொரு துறைக்கும் அதிகாரிகளை நியமித்தார். தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் மிக முக்கிய பதவியை சைலேந்திரபாபுக்கு கொடுத்தார். தனக்கு வழங்கப்பட்ட பணியை எவ்வாறு ஆற்றினார் என்று பார்க்கும் போது காவலர்களுக்கு வார விடுமுறை உள்ளிட்ட சில முன்னெடுப்புகளை அவர் மேற்கொண்டிருந்தாலும் விமர்சனங்களே அதிகளவில் நிற்கிறது.
சைலேந்திரபாபு மீதான விமர்சனங்கள்!தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்ற பேச்சு எதிர்கட்சிகளைக் கடந்து பொதுமக்கள் மத்தியிலும் எழுந்தது. கள்ளக்குறிச்சி கலவரம், லாக்கப் மரணங்கள், பல் பிடுங்கிய விவகாரம் என அரசின் மீது விமர்சனம் வருவதற்கு முக்கிய காரணமாக காவல்துறையின் செயல்பாடுகள் இருந்தன. முக்கிய பிரச்சினைகளில் டிஜிபி கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
டெல்லி சென்ற தமிழக அரசு குழுஇந்நிலையில் ஜூன் 30ஆம் தேதியுடன் சைலேந்திரபாபுவின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் தமிழ்நாடு டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான பெரிய பட்டியலோடு கடந்த வாரம் டெல்லி சென்றது தமிழக அரசின் குழு. இறையன்பு ஐஏஎஸ், அமுதா ஐஏஎஸ், சைலேந்திரபாபு உள்ளிட்டோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதிய டிஜிபி சங்கர் ஜிவால்தமிழக அரசு அளித்த பட்டியலில் இருந்து மூன்று பேரின் பெயரை டிக் செய்து ஒன்றிய அரசு கொடுத்துள்ள நிலையில் அதில் ஒருவரை தமிழக அரசு அறிவிக்க உள்ளது. சங்கர் ஜிவாலின் பெயரே முன்னணியில் இருப்பதால் இன்று அல்லது நாளை காலை இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவும், தமிழ்நாடு டிஜிபியாக சங்கர் ஜிவாலும் அறிவிக்கப்பட உள்ள நிலையில், முக்கியமான இரு பதவிகளில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை அமர வைக்கிறாரே ஸ்டாலின் என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது.
எதிர்பார்ப்புகள் என்னென்ன?
புதிதாக பதவியேற்கும் டிஜிபி சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுக அரசின் மீது சட்டம் ஒழுங்கு குறித்து விமர்சனங்கள் எழுந்தால் அது தேர்தலில் பிரதிபலிக்கும். எனவே ஆரம்பம் முதலே அதிரடி காட்ட வேண்டும். சங்கர் ஜிவால் அதை செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.