சென்னையின் சமகால ரவுடிகள் மூன்று பேருக்கு இடையே நடக்கும் அதிகார யுத்தத்தில் ஒரு ரிட்டயர்டு ரவுடி உள்ளே நுழைந்தால் என்ன ஆகும் என்பதே ‘தலைநகரம் 2.’
நஞ்சுண்டா (பிரபாகர்), வம்சி (விஷால் ராஜன்), மாறன் (ஜெய்ஸ் ஜோஸ்) ஆகிய மூவரும் தலைநகரத்தை தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என ஏரியா வாரியாகப் பிரித்து ஆட்சி செய்துவருகிறார்கள். அவர்களுக்குள் மொத்தச் சென்னைக்குமான அதிகார யுத்தமும் நடந்துவருகிறது. அதே சென்னையில் ஒரு காலத்தில் ‘பாட்ஷா’வாக இருந்த ரைட்டு, ‘மாணிக்கமாக’ மாறி தற்போது ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துவருகிறார். இந்த மூவரின் யுத்தத்திற்கு இடையே மாட்டிக்கொள்ளும் ரைட்டு என்னவெல்லாம் செய்தார் என்பதே படத்தின் கதை.
ஓய்வுபெற்ற ரவுடி ரைட்டாக சுந்தர்.சி. ‘கே.ஜி.எஃப்’, ‘பாட்ஷா’ ரக பில்டப்போடு என்ட்ரி கொடுப்பவர், சண்டைக் காட்சிகளுக்குத் தேவையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார். ஆனால் ரவுடிக்கு ஏற்ற இறுக்கம் உடல்மொழியில் இருக்கிறதே தவிர முகபாவங்களில் சுத்தமாக இல்லை. மிரட்டலான வசன உச்சரிப்பிலும் ‘இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டுமோ’ என யோசிக்க வைக்கிறார். சினிமா நடிகையாகவே உலா வரும் நாயகி பாலக் லால்வானி நடிக்க மட்டும் மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார். தம்பி ராமையாவும் ஆயிராவும் தங்கள் பாத்திரத்துக்குத் தேவையானதைச் செய்திருக்கிறார்கள். ‘டாட்டா சுமோ பத்தாது, லாரி வேணும்’ எனும் அளவுக்கு வில்லன்களை ஏற்றி வந்திருக்கிறார் இயக்குநர் துரை. மூன்று பிரதான வில்லன்கள் கவனிக்க வைத்தாலும் அனைவருமே காலம் காலமாக எல்லாப் படங்களிலும் செய்வதையே செய்திருக்கிறார்கள்.
சண்டைக் காட்சிகளில் ஜிப்ரானின் பின்னணி இசை ஓகே ரகம். ஒளிப்பதிவாளர் இ.கிருஷ்ணமூர்த்தியும், படத்தொகுப்பாளர் ஆர்.சுதர்சனும் படத்தை இன்னுமே மெருகேற்றியிருக்கலாம்.
டிசைன் டிசைனாகக் கொல்வது எப்படி என்பதை மறைமுகமான அஜென்டாவாக வைத்துக்கொண்டு ‘வடசென்னை’, ‘பாட்ஷா’ போன்றவற்றை மிக்ஸியில் அடித்துக் கதை எழுதியிருக்கிறார் இயக்குநர் துரை. மூன்று ரவுடிகளின் பின்னணி, வில்லிகளாகக் காட்டப்படும் மூன்று பெண்கள், ரிட்டயர்டு ரவுடி அவர்களின் யுத்தத்தில் வந்து மாட்டுவது என முதல் பாதியின் திரைக்கதை கொஞ்சம் கவனிக்க வைக்கிறது. ஆனால், அதே கியரில் வண்டியை ஓட்டாமல் சினிமா நடிகையின் சிக்கல், அவருக்கு ரவுடி சுந்தர்.சி-யைப் பார்த்ததும் மலரும் காதல் என யூ-டர்ன் அடித்து அலற விட்டிருக்கிறார்கள்.
அதிபயங்கரமான வன்முறைக் காட்சிகள், லாஜிக் மீறல்கள் என்பதைத் தாண்டி நாயகனை புத்திசாலியாகக் காட்ட பலூனில் ஆசிட், கழிப்பறை ப்ளஷ் டேங்கில் பெட்ரோல் என்றெல்லாம் ‘நவீன யுக்தி’களைக் கையாண்டிருக்கிறார்கள், எதுக்கு?! க்ளைமாக்ஸில் வில்லனை ஹீரோ கொல்லும் காட்சியிலும் எவ்வித சுவாரஸ்யமும் இல்லை. தெலுங்கு வில்லன் என்பதை உணர்த்த அவரை ‘ரைட்டூஉஉ, ரைட்டூஊ’ எனக் கூவச் சொல்லியிருப்பது எல்லாம் கொஞ்சம்கூட நியாயம் இல்லீங்கண்ணா!
தொடக்கத்திலிருந்த சுவாரஸ்யம் படம் முழுக்க இருந்திருந்தால் நாமும் ‘ரைட், ரைட்’ சொல்லியிருக்கலாம்.