எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு மதிப்புமிக்க ஜெர்மன் புத்தக வர்த்தக நிறுவனத்தின் ‘அமைதி பரிசு’ அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் ஆபத்துகளுக்கு மத்தியில் நேர்மறையான அணுகுமுறையோடு இலக்கிய பணியை செய்ததால் இவ்விருது வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
70 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இவ்விருது. இரண்டாம் உலகப் போர் முடிந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகிலிருந்து தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. ஒரு நாட்டுக்குள் அன்பு, அமைதி மற்றும் சமத்துவத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் நபர்களைத் தைரியமாக எழுத்துகளால் எதிர்ப்பவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான இவ்விருது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி விருது தனிநபர்களை அங்கீகரிப்பதன் மூலம் சர்வதேச சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதாக ஜெர்மன் புத்தக வர்த்தகம் தெரிவித்துள்ளது. மேலும் விருத்தாளர்களின் தேசியம், இனம் மற்றும் மத பின்னணியைக் குறிப்பிடாமல் தேர்ந்தெடுக்கப்படுவது, இதன் கூடுதல் சிறப்பு. பரிசுத் தொகைகையாக 25,000 யூரோ வழங்கப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு 22,50,000 ரூபாய் ஆகும்.
சல்மான் ருஷ்டி, கடந்த ஆண்டு நியூயார்க்கில் நடந்த இலக்கிய விழா ஒன்றில் கத்தியால் குத்தி தாக்கப்பட்டார். இதன் விளைவாக தனது வலது கண்பார்வையை இழந்தார்.இதற்கு முன்னரும் பலமுறை கொலைவெறித்தாக்குதல் இவர் மேல் நடத்தப்பட்டுள்ள்ளது.
யார் இந்த சல்மான் ருஷ்டி? எதற்காக ஒரு படைப்பாளன் மீது இத்தகைய வெறுப்புணர்வு?
இந்தியாவில் மும்பை மாநகரத்தில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த சல்மான் ருஷ்டி, இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். ஆங்கிலத்தில் தனது முதல் நாவலை எழுதிய ருஷ்டி, பெரும்பாலும் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான கோடுகளை இணைக்கும் மேஜிக்கல் ரியலிச பாணியில் எழுதுபவர். வரலாற்று நிகழ்வுகளை புனைகதைகளுடன் இணைப்பது இவரது தனித்துவமாக அறியப்படுகிறது. இவரது படைப்புகள் 40க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
புக்கர் பரிசு பெற்ற ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ (தமிழில்: நள்ளிரவின் குழந்தைகள்) நாவலின் மூலமாக பரவலாக அறியப்பட்டவர். இந்தியாவில் பல கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இந்நாவல் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இந்தியா விடுதலை அடைந்த நள்ளிரவில் பிறந்த ஒரு குழந்தையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட அந்த நாவல், விடுதலை காலக்கட்டத்தில் நடந்த புலம் பெயர்தல், மதத்தின் பெயரால் நடந்த பிரிவினை சண்டைகளைப் பற்றி பேசியிருக்கும்.
பெரும்பாலும் இந்திய துணைக்கண்டம் சார்ந்து புனையப்பட்டிருக்கும், ருஷ்டியின் எழுத்துலகம், நாகரிகங்களுக்கிடையேயான தொடர்புகள், இடம்பெயர்வுகளால் ஏற்படும் சிதைவுகளை ஆராய்கிறது. நாவல்கள் தவிர, சிறுகதைகள், பயண இலக்கியங்கள், தன்வரலாறு மற்றும் பத்திரிகைகளிலும் எழுதியுள்ளார்.
1988-ல் வெளியான ருஷ்டியின் நான்காவது நாவலான ” The Satanic Verses”, அவரது வாழ்க்கையைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டது. நாவலின் ஒரு குறிப்பிட்ட பகுதி முகமது நபியின் வாழ்க்கையை நையாண்டியாக சித்தரிப்பதாகக் குற்றசாட்டு எழுந்தது. ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா ருஹோல்லா கொமெய்னி, ருஷ்டியின் மரணத்திற்கு அழைப்பு விடுக்கும் ஃபத்வா அறிக்கையை வெளியிட்டார்.
அதில் அவரது உயிரை எடுப்பவர்களுக்கு 2.5 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் உலகிலுள்ள முஸ்லிம்களை அவரை குறிவைக்க வலியுறுத்தினார். இதனால் போலீஸ் பாதுகாப்போடு தலைமறைவு வாழ்வு வாழ ருஷ்டி தள்ளப்பட்டார். கொமெய்னியின் மரணத்திற்குப் பிறகும் ஈரான் இந்த ஃபத்வாவை தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகெங்கும் அவரது புத்தகம் விற்கப்பட்ட கடைகள் எரிக்கப்பட்டது. பாகிஸ்தான் இந்தப் புத்தகத்திற்கு தடை விதித்தது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கலவரத்தில் 6 நபர்கள் கொல்லப்பட்டனர். அன்றைய இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி இப்புத்தகத்தை இறக்குமதி செய்யத் தடை விதித்தார். ஜப்பான் மொழியில் இந்நாவலை மொழிபெயர்ப்பு செய்தவர் கொல்லப்பட்டார்.
இத்தாலி நாட்டில் மற்றொரு மொழிபெயர்ப்பாளர் மேல் கொலைவெறி தாக்குதல் நடைபெற்றது. ருஷ்டி ஏறக்குறைய 10 ஆண்டுகாலம் தலைமறைவாக இருந்தார். இதனை ருஷ்டி நினைவுக் குறிப்பாக “ஜோசப் அன்டன்” என்ற புனைபெயரில் எழுதி ஒரு புத்தகமாக வெளியிட்டார். ஜோசப் அன்டன் என்பது ஜோசப் கான்ராட், அன்டன் செக்காவ் ஆகியோரின் எழுத்துக்களின் மீது கொண்ட காதலின் காரணமாக வைத்து கொண்டதாக தெரிவித்தார்.
1998 இல் இவர் மேல் வைக்கப்பட்ட ஃபத்வா ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் யார் ஃபத்வா கொடுத்தாரோ, அவர் தான் விலக்க முடியும் என்று ஒரு சில நாடுகள் அதனை நிராகரித்து ஃபத்வாவைத் தொடர்ந்தது. 2016ஆம் ஆண்டு இவரது உயிருக்கான விலையை 6 மில்லியன் டாலராக உயர்த்தினார்கள். உலக நோபல் சம்மேளம் இவ்விவகாரத்தில் நுழைந்து, இது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என மரண தண்டனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இதற்கு பிறகு நியூயார்க் நகருக்கும் ருஷ்டி இடம்பெயர்ந்தார். அங்கே தனது பறிக்கப்பட்ட சுதந்திரத்தை ரசிப்பதாக கூறினார், மேலும் அவருக்கு ஆதரவாக நின்று தனது வெளியீட்டு உரிமையைப் பாதுகாத்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அங்கே உள்ள இளைய எழுத்தாளர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தார்.
இந்நிலையில் “அமெரிக்க எப்படி தனக்கு பாதுகாப்பான நாடாக இருக்கிறது” என்பதை உரையாற்ற ஒரு நிறுவனத்திற்கு சென்ற போது, மர்ம நபரால் தாக்கப்பட்டார். இதில் அவரது முகம் மற்றும் வயிற்று பகுதி பலமாக தாக்கப்பட்டு நரம்பு மண்டலம் கடுமையான பாதிப்படைந்தது. இதில் தான் வலது கண் பார்வை பறிபோனது. பல மாதங்களாக இதற்காக சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்தவர், Victory City என்ற நாவலை எழுதி தனது பயணத்தை மீண்டும் தொடர்ந்தார்.
தனக்கு நேர்ந்த தாக்குதல் சம்பவத்தை ஒரு சிறிய புத்தகமாக எழுத இருப்பதாகச் சொல்பவர். அனைத்து மத அடிப்படைவாதங்களையும் எதிர்க்கிறார். பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும் தன்னை நாத்திகர் என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார். மேலும் 7000 மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் காஷ்மீரில் நடப்பது இருநாடுகளின் பேராசை வெறியாட்டம் என்று கூறியிருந்தார்.காஷ்மீரில் புதிதாக நிலம் வாங்க விற்க சட்டம் இயற்றிய போது பாஜக அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இப்போது அமைதி விருது கிடைத்தது பற்றி ருஷ்டி “இந்த முக்கியமான விருதுக்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன், மேலும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இதில் நடுவர் மன்றத்தின் பெருந்தன்மைக்கே நான் நன்றி சொல்ல முடியும்.” என்று தெரிவித்தார்.
நடந்து முடிந்த சம்பவங்கள் ருஷ்டியின் கடைசி நாவலின் இறுதி வரிகளை நியாபகப்படுத்துகிறது. ‘Words Are the Only Victors’ ஆம் இத்தனை துன்பங்களை கடந்தும் ருஷ்டியின் எழுத்து அவரை வெற்றியடையச் செய்துள்ளது.