புதுடெல்லி: பொது சிவில் சட்டம் அவசியம் என பிரதமர் மோடி கூறியுள்ள நிலையில், இதற்கு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பொது சிவில் சட்டத்தை, கொள்கை அடிப்படையில் ஆதரிப்பதாக ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.
பொது சிவில் சட்டம் குறித்து நாட்டு மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துகளை கடந்த 14-ம் தேதி முதல் தெரிவிக்கலாம் என சட்ட ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இதுவரை 8.5 லட்சம் பேரிடம் இருந்து கருத்துகளை சட்ட ஆணையம் பெற்றுள்ளதாக அதன் தலைவர் நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தெரிவித்துள்ளார். ஜூலை 14-ம் தேதி வரை அனைத்து தரப்பினரும், பொது சிவில் சட்டம் குறித்த தங்கள் கருத்துகள், எதிர்ப்புகளை சட்ட ஆணையத்திடம் தெரிவிக்க அவகாசம் தரப்பட்டுஉள்ளது.
இந்நிலையில், மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் பாஜக நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இருவிதமான சட்டங்களால் நாட்டு நிர்வாகத்தை நடத்த முடியாது. நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறுவதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம். ஆனால், பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்’’ என்றார்.
இந்நிலையில், பொது சிவில் சட்டம் குறித்த பிரதமரின் கருத்தை அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் காங்கிரஸ், திமுக, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
‘பிரதமர் மோடியின் இந்த கருத்து, நாட்டின் பன்முகத்தன்மை மீதான தாக்குதல். தேர்தல்களை முன்னிட்டு ஓட்டு வங்கி அர சியல், மக்களை பிரிக்கும் அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது’ என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும், நேற்று முன்தினம் இரவே அவசர கூட்டத்தை காணொலி மூலம் கூட்டி இதுகுறித்து ஆலோசனை நடத்தியது. பொது சிவில் சட்டத்தின் அம்சங்கள் குறித்து ஆலோசித்த முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர்கள், பொது சிவில் சட்டத்தை எதிர்க்க முடிவு செய்துள்ளனர். சட்ட ஆணையம் முன்பு, தங்கள் தரப்பு கருத்துகளையும், ஆவணங்களையும் தாக்கல் செய்வோம் என முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த வாரியத்தின் உறுப்பினர் மவுலானா அர்ஷத் மத்னி கூறும்போது, ‘‘மத்திய அரசு தனது நோக்கத்தை தெளிவாக கூறியுள்ளது. இந்த விஷயத்துக்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம் நடத்த வேண்டாம் எனவும் அரசு வலியுறுத்தியுள்ளது’’ என்றார்.
மற்றொரு உறுப்பினர் காலித் ரஷீத் கூறுகையில், ‘‘அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் கூட்டம் வழக்கமான ஒன்று. அதை பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் கூறிய கருத்துடன் தொடர்புபடுத்த கூடாது. பொது சிவில் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பது எங்கள் நிலைப்பாடு. அதனால், பொது சிவில் சட்டத்தை கடுமையாக எதிர்ப்போம். இந்தியாவில் பல மதத்தினர் உள்ளனர்.
பொது சிவில் சட்டம் முஸ்லிம்களை மட்டுமின்றி, இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள் என அனைத்து தரப்பினரையும் பாதிக்கும்’’ என்றார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறும்போது, ‘‘பிரதமர் மோடி எதை வேண்டுமானாலும் கூறட்டும். நாட்டில் நிலவும் உண்மையான பிரச்சினைகளான வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு மற்றும் மணிப்பூர் விவகாரம் குறித்து அவரிடம் பதில் இல்லை’’ என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறும்போது, ‘‘பெரும்பான்மை கொண்ட அரசால், பொதுசிவில் சட்டத்தை மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்க முடியாது, இது பிளவுகளை மேலும் அதிகரிக்கும்’’ என்றார்.
பொது சிவில் சட்டத்தை முதலில் இந்துக்களுக்கு பிரதமர் மோடி அமல்படுத்த வேண்டும் என்று திமுக தெரிவித்துள்ளது.
அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஒவைசி கூறியபோது, ‘‘பொது சிவில் சட்டம் என்ற பெயரில் நாட்டின் பன்முகத்தன்மை பறிக்கப்படுமா. ஒபாமாவின் அறிவுரையை பிரதமர் மோடி சரியாக புரிந்து கொள்ளவில்லை என தோன்றுகிறது. இந்து கூட்டுக் குடும்ப சட்டத்தை பிரதமர் மோடி முடிவுக்கு கொண்டு வருவாரா? பொது சிவில் சட்டம் பற்றி பேசும்போது, இந்து சிவில் சட்டத்தை பற்றி பேசுகிறார். இந்து கூட்டு குடும்ப சட்டத்தை பிரதமரால் நீக்க முடியுமா?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரும் பிஹார் அமைச்சருமான விஜய்குமார் சவுத்ரி கூறும்போது, ‘‘பொது சிவில் சட்டம் பற்றி பேசி மதரீதியாக மக்களை பிரிக்க பிரதமர் மோடி முயற்சிக்கிறார்’’ என்றார்.
கேஜ்ரிவால் கட்சி ஆதரவு: பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பொது சிவில் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சந்தீப் பதக் கூறும்போது, ‘‘பொது சிவில் சட்டத்தை கொள்கை அடிப்படையில் ஆதரிக்கிறோம். அரசியல் சாசனத்தின் 44-வது சட்டப்பிரிவும் இதை ஆதரிக்கிறது. இதுகுறித்து அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்’’ என்றார்.
பிஹார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் கடந்த வாரம் நடந்தபோது, டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்காததால், இந்த கூட்டணியுடன் இணைந்து செயல்படுவது சிக்கலாக இருக்கும் என ஆம் ஆத்மி கருத்து தெரிவித்தது. இந்நிலையில் பொது சிவில் சட்டத்துக்கு ஆம் ஆத்மி தற்போது ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 3-வது வாரம் தொடங்க உள்ளது. அப்போது பொதுசிவில் சட்டத்தை கொண்டுவர அரசு முயற்சித்தால், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கும் மழைக்காலகூட்டத் தொடர் புயலை கிளப்பும் என தெரிகிறது.