பாட்னா: பிஹாரின் வைசாலி மாவட்டத்தில் தலைநகர் வைசாலியை ரகோபூருடன் இணைக்க கங்கை நதி மீது தற்காலிக பாலம் கட்டப்படுகிறது. இந்த பாலத்தின் ஒரு பகுதி பலத்த காற்றால் நேற்று இடிந்து விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
பிஹாரில் கட்டுமானப் பணியின்போதே பாலம் இடிந்து விழுவது, ஒரே மாதத்தில் இது மூன்றாவது சம்பவமாகும். கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கல்கலியா மற்றும் அராரியா இடையே மெச்சி ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் 100 மீட்டர் பாலத்தின் ஒரு பகுதி கடந்த சில தினங்களுக்கு முன் இடிந்து விழுந்தது.
இதற்கு முன் கடந்த 4-ம் தேதி, கங்கை நதி மீது கட்டப்படும் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. ரூ.1,700 கோடி செலவில் 3.16 கி.மீ. தொலைவுக்கு கட்டப்படும் இந்தப் பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியும் இடிந்து விழுந்தது.