தமிழகத்தில் பால்வாடி என்றால் பலருக்கும் தெரியும். குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் வழங்கவும், ஆரம்ப கல்விக்கான அச்சாரம் போடவும், ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யவும் உதவிகரமாக இருந்து வருகின்றன. அரசின் பார்வையில் அங்கன்வாடி மையங்கள் என்று அழைக்கப்படுகின்றன. குறிப்பாக குழந்தை பிறந்தது முதல் 6 வயது ஆகும் வரை தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்க வழிவகை செய்யப்படுகின்றன.
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் போராட்டம்!
அங்கன்வாடி மையங்களின் சிறப்பு
இதுதவிர வளர் இளம் பெண்களுக்கு தேவையான இரும்பு சத்து மாத்திரைகள், கர்ப்பிணி பெண்களுக்கு தேவைப்படும் சத்து மாத்திரைகள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அங்கன்வாடி பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உரிய முறைகள் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
போட்ட விதை
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் வருங்கால தலைமுறையை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றி வருகின்றன. இவை கருணாநிதி முதல்முறை முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, 1975ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர்.
குழந்தைகளுக்கு பெரிய அளவில் பலன்
இந்த அங்கன்வாடி மையங்களுக்கு செல்லாமல் வளராத கிராமத்து குழந்தைகளே இல்லை என்று சொல்லலாம். நகர்ப்புறங்களில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் விட்டு விட்டு பணிக்கு சென்று வருவர். இதனால் பல்வேறு வகைகளில் பலன் இருப்பதை மறுப்பதற்கில்லை.
மூடப்படும் அங்கன்வாடி மையங்கள்
இந்நிலையில் பல்வேறு அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சென்னையில் மட்டும் 330 அங்கன்வாடி மையங்கள் இதுவரை மூடப்பட்டுள்ளன. இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் அங்கன்வாடி மையங்கள் மூடப்படும் எனச் சொல்லப்படுகிறது. ஏற்கனவே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கின்றன.
பெற்றோர்களுக்கு அதிர்ச்சி
இந்த நிலையில் அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவது பெற்றோர்களுக்கு பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணி குறித்து விசாரிக்கையில், குழந்தைகள் வருகையை காரணம் காட்டி இரண்டு மையங்களை ஒன்றாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறுகின்றனர்.
அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை
அதாவது ஒரு மையத்தை மூடிவிடுகின்றனர். குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு அங்கன்வாடி மையங்கள் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சர் கீதா ஜீவன் மறுப்பு
இந்நிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பதிலளித்து பேசுகையில், அங்கன்வாடி மையங்கள் மூடப்படுகிறது என்ற செய்தி தவறானது. காலிப் பணியிடங்களால் தற்காலிக ஏற்பாட்டை தான் செய்து வருகிறோம். போதிய ஆட்கள் நியமனம் செய்த உடன் முழு வீச்சில் செயல்பட ஆரம்பித்து விடும் எனக் கூறினார்.