சென்னை: இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய, மாமன்னன் படக்குழுவினருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜின் அடுத்த படைப்பான மாமன்னன் படத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மாமன்னன் திரைப்படம் உதயநிதியின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறியுள்ளது.
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா: ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியாகிறது. இதையடுத்து படக்குழு நேற்று மேக்கிங் வீடியோவை வெளியிட்டு இருந்தது, ப்ளாக் அண்ட் ஒயிட்டில் இருக்கும் இந்த வீடியோவின் பின்னணியில் வடிவேலுவின் குரல் மட்டும் பாடலாக ஒலிக்கிறது. கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா… என்ற எவர்கிரீன் ஹிட் பாடலை எந்த இசைக் கலப்பும் இல்லாமல் வடிவேலு பாடி இருக்கிறார்.
சர்ச்சை பேச்சு: மாமன்னன் இசைவெளியீட்டு விழாவில் கமல் சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் அமர்ந்து இருக்கும் போதே தேவர்மகன் திரைப்படம் குறித்து பேசியது, சோஷியல் மீடியாவில் புயலை கிளப்பியது. இதற்கு மாரி செல்வராஜ் உரிய விளக்கம் கொடுத்திருந்தார். இதையடுத்து, நேற்று உதயநிதி மற்றும் மாரிசெல்வராஜ் கமலை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து இருந்தனர்.
உதயநிதி ட்வீட்: இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மாமன்னன் திரைப்படத்தை பார்த்ததோடு, இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்று உணர்வு பூர்வமாக பாராட்டிய உலக நாயகன் கமலஹாசன் சார் அவர்களுக்கு மாமன்னன் பட குழுவினர் சார்பில், எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என பதிவிட்டு இருந்தார்.
என் கருத்துக்கு வலிமை சேர்க்கும் மாமன்னன்: உதயநிதி ஸ்டாலினின் இந்த பதிவுக்கு, நடிகர் கமலஹாசன் மானுடர் அனைவரும் சமம் என்பது என் வாழ்க்கை முறை. என் கருத்துக்கு வலிமை சேர்க்கும் மாமன்னனுக்கு வாழ்த்துக்கள் என ட்வீட் போட்டுள்ளார். கமலஹாசனின் இந்த பதிவு, தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
தியேட்டரை அடித்து நொறுக்குவோம்: படம் திரையிடப்பட்டால் தியேட்டரை அடித்து நொறுக்குவோம் என்ற மிரட்டல்களும் வருகிறது. ஆனால் இவர்களை மாரி செல்வராஜ் தனது படத்தின் மூலம் உரையாடலுக்கு அழைக்கிறார் என்பது புரியாமல் கண்மூடித்தனமாக மிரட்டல்களைத் தொடுத்து வருகின்றனர். ஆனால் ஒரு கலைஞனுக்கு மிரட்டலும் விமர்சனம்தான்.