Maamannan: ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”.. மாமன்னன் படத்தில் மாரி செல்வராஜ் பேசும் அரசியல் என்ன?

சென்னை: இந்த படத்தை சூப்பரான திரைக்கதை கொண்டு அனைத்து ரசிகர்களையும் உற்சாகப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்திலேயே மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

தேவர்மகன் படத்தில் இருந்தது போன்ற எந்தவொரு கமர்ஷியல் விஷயங்களும் இந்த படத்தில் இல்லாமல் நேரடியாக பட்டியலின மக்களின் அரசியலை உரக்க தனக்கு கிடைத்துள்ள சினிமா ஆயுதத்தைக் கொண்டு பேசி உள்ளார்.

கோயில் குளத்தில் பட்டியலின மக்கள் குளித்தால் அடித்துக் கொள்வோம், அரசியலுக்காக பட்டியலின மக்களை கூடவே வைத்துக் கொண்டு செல்வோம். ஆனால், அவர்கள் எங்களுக்கு சரிசமமாக எப்போதும் உட்காரக் கூடக் கூடாது என்கிற சாதிய வெறி எந்தளவுக்கு ஊறிப் போயி அவர்கள் காட்டுமிராண்டிகளாக இன்னும் சொல்லப் போனால் இன்னமும் மனதளவில் வேட்டை நாய்களாக வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை காட்டி உள்ளார் மாரி செல்வராஜ்.

ட்ரோல்களுக்கு பதிலடி: மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் தேவர்மகன் பற்றி பேசிய பேச்சுக்கு ஏகப்பட்ட எதிர்வினைகள் கிளம்பின. மாமன்னன் படத்தையே புறக்கணிக்க வேண்டும் என குரல்கள் கிளம்பின.

ஆனால், அத்தனைக்கும் தனது திரை மொழியால் பதிலடி கொடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ். இங்கே எல்லாரும் சமம் என்கிற நிலை வரணும். உனக்கு சமமா நானும் உட்கார ஆசப்படுறேன். அது ஏன் உனக்கு வலிக்குது என்கிற கேள்வியை பலமாக கேட்டுள்ளார்.

அடிச்சா திருப்பி அடி: உதயநிதி ஸ்டாலினை ஆரம்பத்தில் காட்டும் காட்சியிலேயே அவர் சொல்லித் தரும் அடிமுறை வகுப்பில் ஒரு உயர்சாதி மாணவன் பட்டியலின சாதி மாணவன் கால் பட்டு விட்டதால் அடித்து விடுகிறான்.

மன்னிப்புக் கேட்ட பிறகும் அடித்தான் என சொல்ல, அவனை உன்னால் திருப்பி அடிக்க முடியாதா? என உதயநிதி கேட்பது மட்டுமின்றி நறுக்குன்னு மூன்று குத்து அதிகம் குத்தினால் அவன் திருப்பி அடிக்க மாட்டான் என்கிறார். அடிச்சா அமைதியா இருக்காதே, திருப்பி அடி என கர்ணனில் விதைத்த அதே விதையைத்தான் இங்கேயும் மாரி செல்வராஜ் வைக்கிறார்.

பட்டியலின மக்களை வைத்து அரசியல்: பட்டியலின மக்களை பல கட்சிகள் வேட்பாளர்களாக நிறுத்தினாலும், அவர்களை சமமாக நடத்த மாட்டார்கள் என்கிற வெளிப்படையான அரசியலை உதயநிதி ஸ்டாலினை வைத்தே இயக்கிய நிலையில், மாரி செல்வராஜ் தான் சொல்ல வந்ததை அழுத்தம் திருத்தமாக சொல்லி விட்டார் என்றே தெரிகிறது.

ஜனாதிபதியாகவே பட்டியலினத்தவர் ஆனாலும், இன்னமும் சில இடங்களுக்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக வரும் செய்திகள் எந்தளவுக்கு ஆதிக்க வர்க்கத்தின் மனதுக்குள் விஷமாக வேறூன்றி இருக்கிறது என்பதை காட்சிகளாகவும், வசனங்கள் வழியாகவும் கிடைக்கிற கேப்பில் எல்லாம் புத்தர், அம்பேத்கர், பெரியார் அடையாளங்களை வைப்பது போல பட்டியலின மக்களை வைத்து ஆதிக்க வர்க்கத்தினர் நடத்தும் அரசியலையும் பேசியிருக்கிறார் மாரி செல்வராஜ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.