Maamannan Review: மிரட்டி விட்ட வடிவேலு.. மாஸ் காட்டினாரா மாரி செல்வராஜ்.. மாமன்னன் விமர்சனம்!

Rating:
3.0/5

நடிகர்கள்: வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் ஃபாசில்இசை: ஏ.ஆர். ரஹ்மான்இயக்கம்: மாரி செல்வராஜ்

சென்னை: “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” இதுதான் மாமன்னன் படத்தின் சாராம்சம். சாதிய அடிப்படையில் சம நீதி கிடைக்காததை எதிர்த்து மாரி செல்வராஜ் சுற்றியுள்ள சாட்டை தான் மாமன்னன்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள மாமன்னன் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

ஓபனிங் சீனே பன்றிகளுடன் உதயநிதி ஸ்டாலினை காட்டும் காட்சியிலும் மாலையுடன் வடிவேலுவை காட்டும் காட்சிக்குமே தியேட்டர் அதிர்ந்தது. தனுஷ் சொன்னது போல இடைவேளை காட்சியில் தியேட்டர் தெறித்த நிலையில், இரண்டாம் பாதியும் அதே போல இருந்ததா? அல்லது என்ன என்ன பிரச்சனைகள் படம் முழுக்க இருந்தன என்பது குறித்து முழுமையாக இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..

மாமன்னன் கதை: சேலத்தில் பகத் ஃபாசிலின் அப்பா கட்சியில் தொண்டனாக இருந்த மாமன்னன் (வடிவேலு) எம்எல்ஏவாக மாறியிருக்கிறார். பகத் ஃபாசில் தற்போது அந்த கட்சியின் தலைவராக இருந்துக் கொண்டே நாய்களை வைத்து ரேஸ் விடுவது, போட்டியில் தோற்ற நாயை அடித்துக் கொல்வது என ஆதிக்க மனநிலையில் வாழ்ந்து வருகிறார்.

எம்எல்ஏ மகனாக இருப்பதால் அவனுக்கும் அதிகாரத் திமிர் இருக்கும் என கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே கீர்த்தி சுரேஷ் உதயநிதியை ஒதுக்கி வருகிறார்.

எம்எல்ஏவாக அப்பா இருந்தாலும் 15 ஆண்டுகள் அவரிடம் பேசாமல் உதயநிதி ஸ்டாலின் அடிமுறை தற்காப்பு கலையை கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்.

சிறு வயதில் கோயில் குளத்தில் குளித்த அதிவீரன் (உதயநிதி ஸ்டாலின்) மற்றும் அவனது நண்பர்களை அந்த ஊரில் சாதிய வெறி ஊறிய சிலர் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்களை கல்லாலே அடித்துக் கொல்லுகின்றனர். அங்கிருந்து அடிபட்டு தப்பித்து வரும் அதிவீரன் அப்பாவிடம் சொல்லியும் அப்பா வடிவேலு பகத் ஃபாசிலின் அப்பாவிடம் சொல்லியும் எந்த பலனும் இல்லை என்பதால் அப்பாவிடம் பேசாமல் தவிர்த்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

இப்படி எல்லோருடை இன்ட்ரோவையும் கடகடவென சொல்லிவிட்டு முதல் பாதியின் இறுதியில் பகத் ஃபாசிலுக்கும் உதயநிதிக்கும் இடையே பிரச்சனை வெடிக்கும் காட்சியில் அப்பாவுக்காக அப்பாவின் சுயமரியாதைக்காக உதயநிதி குரல் கொடுக்கும் இடத்தில் இடைவேளை வருகிறது.

இரண்டாம் பாதியில், பகத் ஃபாசில் வடிவேலு மற்றும் உதயநிதியை கொல்லத் துடிக்க, மேலிடத்தில் இருந்து சிக்கல் வர, தேர்தலில் வெற்றிப் பெற்று மாமன்னனையும் அவன் மகனையும் அந்த இன மக்களையும் அடிமையாக்க பகத் ஃபாசில் போடும் திட்டம் என்ன ஆகிறது என்பது தான் மாமன்னன் படத்தின் கதை.

மிரட்டும் நடிப்பு: வடிவேலு இதுவரை நடித்த படங்களை விட இந்த படத்தில் அவரது நடிப்பு பல இடங்களில் மெய் சிலிர்க்க வைக்கிறது. இந்த படத்தில் டைட்டில் கார்டிலேயே வடிவேலு பெயரை முதலில் மாரி செல்வராஜ் போட்டது. இந்த படத்தில் அவர் தான் நாயகன் என்பதை உணர்த்துகிறது.

உதயநிதி ஸ்டாலினை பகத் ஃபாசில் பிரச்சனையை ஒன்றை சால்வ் செய்து விட வரச் சொல்லி உட்காரச் சொல்கிறார். ஆனால், அங்கே அப்பா கைகட்டி நின்று கொண்டிருப்பதை பார்த்து அப்பாவை உட்காரச் சொல்ல, வடிவேலு இதனால் என்ன பிரச்சனை வரும் என்பதை உணர்ந்து நடித்திருக்கும் காட்சி மற்றும் காரில் பகத் ஃபாசிலை உன்னை சின்ன பையனா இருந்ததில் இருந்து தூக்கி வளர்த்தவன், காசை முழுங்கிட்டு உயிருக்கு நீ போராடினப்போ, சொருகெடுத்து உன்னை காப்பாத்தி விட்டவன் டா நானு என சொல்லிவிட்டு, துப்பாக்கி எடுத்து நீட்டி வெளியே போ எனச் சொல்லும் காட்சியும், முதல்வரிடத்தில் பேசும் வசனத்திலும் அடி பட்டையை கிளப்பி உள்ளார்.

வில்லனாக பகத் ஃபாசிலை பார்த்தாலே அந்த இன மக்களே அதே சாதிய உணர்வுடன் தான் இருப்பார்கள் எனத் தோன்ற வைக்கும் அளவுக்கு மாரி செல்வராஜ் கேட்டதை விட எக்ஸ்ட்ரா ஸ்பூன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கடைசி கிளைமேக்ஸில் அப்படியே சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் பார்த்த பகத் ஃபாசில் தான் தென்படுகிறார்.

உதயநிதி ஸ்டாலின் தான் வளர்க்கும் பன்றிகளுக்கு ஏதோ ஆகிறது என அதன் அழுகை குரல் கேட்டு அங்கே சென்று பார்க்க, ஒட்டுமொத்த பன்றிகளும் செத்துக் கிடக்கும் காட்சியில் நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி உள்ளார். அதே போல அப்பாவுக்கு ஒண்ணுன்னா விட்டுக் கொடுக்காத இடத்திலும் அப்ளாஸ் அள்ளுகிறார்.

பிளஸ்: ஏ.ஆர். ரஹ்மானின் இசை தான் பல இடங்களில் வரும் வசனங்களுக்கும் காட்சிகளுக்கும் பின்னணியில் ஒலிக்கும் இசை மூலம் புல்லரிக்க வைக்கிறார். வடிவேலுவின் நடிப்பு மற்றும் மாரி செல்வராஜின் கூர்மையான வசனங்கள் படத்திற்கு பெரும் பலமாக மாறி உள்ளன.

முதல் பாகம் முழுக்க பரபரப்பாக சென்றது ரசிகர்களை தியேட்டரில் கட்டிப் போட வைத்து விடுகிறது. அதிலும், நாய்களை வைத்து பன்றிகளை வேட்டையாட வைக்கும் அந்த காட்சி மற்றும் பகத் ஃபாசிலுக்கு சமமாக வடிவேலுவை உதயநிதி ஸ்டாலின் உட்கார வைக்கும் காட்சி மற்றும் இறுதி கிளைமேக்ஸ் காட்சியில் மாமன்னனுக்கு கிடைக்கும் உயர்ந்த சீட் என ஏகப்பட்ட பிளஸ்கள் உள்ளன.

Udhayanidhi Stalin Starrer Maamannan Movie Review in Tamil

மைனஸ்: மாமன்னன் படத்தில் இத்தனை பிளஸ் இருக்கா? மைனஸே இல்லையா என்றால், முதல் பாதி முழுக்க ஜெட் வேகத்தில் சென்றுக் கொண்டிருந்த மாமன்னன் படம் 2ம் பாதியில் அப்படியே டிராக் மாறி உதயநிதியின் அரசியல் எதிர்காலத்தை கருத்திக் கொண்டு உருவாக்கப் பட்ட கட்சி படம் போல மாறிவிடுவதே படத்திற்கு பெரிய மைனஸ் ஆகத்தான் தெரிகிறது.

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரோல் என்ன என்பதே கேள்விக்குறியாக உள்ளது. மேலும், வில்லன் பகத் ஃபாசில் அவ்ளோ பெரிய வில்லனாக சொல்லப்பட்டாலும் வெறும் நாயை கொல்வது, பன்றியைக் கொல்வது என்கிற ரீதியிலேயே வெறும் குறியீடாகவே படத்தை மாரி செல்வராஜ் தான் திணிக்க வேண்டிய கருத்தை திணிப்பதில் மட்டுமே குறியாக உள்ளார். முக்கியமான 4 கதாபாத்திரங்களை தவிர்த்து மற்ற அனைவருமே அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாகவே உள்ளனர்.

பெரும் கலவரம் வெடித்தாலும், போலீஸுக்கு அங்கே வேலையே இல்லை என்பது போல உள்ளது. கிளைமேக்ஸில் எந்த ஊருக்குள்ளும் நுழையவே முடியாத மாமன்னன் எப்படி அந்த தேர்தலில் வெறும் அந்த வீடியோ பேச்சை மட்டும் வைத்தார் என்பதை திரைமொழியாக மாரி செல்வராஜ் காட்டத் தவறி விட்டார். ஆனாலும், கடைசியில் கிளைமேக்ஸில் வடிவேலுவை வைத்து அவர் பண்ண வேலை இரண்டாம் பாதியில் டயர்ட்டாகி இருந்த ரசிகர்களை மீண்டும் எழுந்து கைதட்ட வைத்துள்ளது. எல்லோரும் சமம் என சொன்னாலும், சமம் என்கிற உயர்ந்த எண்ணத்தை அதை ஏற்க மறுப்பவர்கள் நெஞ்சில் விதைக்க எந்தமுயற்சியும் எந்தக் காட்சியும் திரையில் காட்டாதது ஏன் என்கிற கேள்வி பலமாகவே எழுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.