Maamannan Review: வடிவேலு, பகத் பாசில், உதயநிதி மூவரும் இணைந்த மாமன்னன் மகுடம் சூடியதா?

சேலம் மாவட்டம் காசிபுரம் தனி தொகுதியில் ஆளும் கட்சியான சமத்துவ சமூக நீதி மக்கள் கழகத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் மாமன்னன் (வடிவேலு). அடிமுறை தற்காப்பு கலையின் ஆசானும், பன்றி வளர்ப்பு தொழில் செய்பவருமான அவரின் மகன் அதிவீரன் (உதயநிதி), 15 ஆண்டுகளாக தன் தந்தையுடன் பேசாமல் இருக்கிறார். அதே கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளராக இருக்கிறார் ரத்னவேல் (பகத் பாசில்). இந்நிலையில், கல்லூரித் தோழியான லீலாவுக்கு (கீர்த்தி சுரேஷ்) அதிவீரன் உதவ, அதனால் அதிவீரனுக்கும் ரத்னவேலுவிற்கும் இடையே பிரச்னை வருகிறது. எம்.எல்.ஏ -வாக இருந்தாலும் அவரை மாவட்ட செயலாளர் ரத்னவேலு நடத்தும் விதம் அதிவீரனை கோபமாக்க, இந்த பிரச்னை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாமன்னனுக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ரத்னவேலுக்குமான பிரச்னையாகவும், பின் இரு சமூகங்களுக்கிடையிலான பிரச்னையாகவும் மாறுகிறது. அதிவீரன் தன் தந்தையுடன் ஏன் பேசாமல் இருக்கிறார், மாமன்னன் என்கிற தனிமனிதனுக்கும் ரத்னவேலு என்கிற தனிமனிதனுக்கும் உள்ள அரசியல்/சமூக வேறுபாடு என்ன, மாமன்னனுக்கும் ரத்னவேலுவிற்குமான மோதலில் யார் வென்றார் போன்ற கேள்விகளுக்கான பதிலை ‘மாமன்னன்’ மூலமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

மாமன்னன் கதாபாத்திரத்தில் வடிவேலு தன் தேர்ச்சியான நடிப்பை படம் முழுக்க வழங்கியிருக்கிறார். மகனுக்காக பாசத்தில் பரிதவிக்கும் தந்தையாகவும் அதிகாரத்தின் முன்பு என்ன செய்வதென தெரியாமல் பொறுத்துப்போகும் இடத்தில் மகன் முன்பு குறுகி நிற்கும் தந்தையாகவும் மாமன்னனாக நடிப்பில் உயர்ந்து நிற்கிறார். இவருக்கும் போட்டியாக பகத் பாசிலும் தன் நடிப்பில் சமர் செய்திருக்கிறார். பழக்கமான அரசியல்வாதி வில்லன் கதாபாத்திரத்திற்கு தன் நடிப்பால் வேறு முகத்தை வழங்கியிருக்கிறார். உருக்கமான காட்சிகளிலும், வடிவேலு மற்றும் பகத் பாசிலுடனான காட்சிகளிலும் உதயநிதி இன்னும் மெனக்கெட்டுடிருக்கலாம். கீர்த்தி சுரேஷுக்கு வழக்கமான காதலி கதாபாத்திரம். லால், சுனில் ரெட்டி, அழகம் பெருமாள், கீதா கைலாசம், விஜய குமார் எனப் பலர் துணை கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். அவர்களில் நிறைய கதாபாத்திரங்களுக்கு வசனமும் இல்லை. தாக்கம் ஏற்படுத்தும் காட்சிகளும் இல்லை.

மாமன்னன்

முதற்பாதியில் பிரதான கதாபாத்திரங்களின் பின்கதையையும், அவர்களின் அகசூழலையும் திரையில் கொண்டு வர இயக்குநர் கையாண்ட திரைமொழிக்கு தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும், செல்வா ஆர்.கே-வின் படத்தொகுப்பும் வலுசேர்த்திருக்கிறது. காட்சியில் ஆழத்தை கடத்த வைக்கப்பட்ட சில ஷாட்டுகளில் தேனி ஈஸ்வரின் நேர்த்தி தெரிகிறது. ஆக்‌ஷன் காட்சிகளையும், சில நீண்ட எமோஷனல் காட்சிகளையும் கத்தரித்திருக்கலாம். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் ஏற்கனவே ஹிட் அடித்த ‘ராசா கண்ணு’, ‘நெஞ்சமே நெஞ்சமே’ பாடல்கள் மட்டுமின்றி, மற்ற பாடல்களும் ரசிக்க வைக்கிறது. பின்னணியிசையில் தானும் ஒரு மாமன்னன் என ஏ.ஆர்.ரகுமான் நிரூபித்திருக்கிறார் என்றாலும், ஆங்காங்கே வரும் மேற்கத்திய இசைகோர்வையால் அந்நியத்தன்மை தெரிகிறது. யுகபாரதியின் பாடல் வரிகள் கவனிக்க வைக்கின்றன.

வடிவேலு, ஃபஹத் ஃபாசில், உதயநிதி ஆகியோரின் அறிமுகத்தையும், அவர்களின் குணங்களையும் துண்டு துண்டாக அதேநேரம் புதுமையான திரைமொழியில் சொல்லத் தொடங்குகிறது முதற்பாதி. இதே பாணியிலேயே, அக்கதாபாத்திரங்களின் பின்கதையும், அது சமகால வாழ்க்கையில் அது ஏற்படுத்தி வரும் தாக்கத்தையும் பேசியிருப்பது கொஞ்சம் சுவாரஸ்யம் தருகிறது. தந்தையின் மீதான அதிவீரனின் கோபத்திற்கு காரணமாக பின்கதை சொல்லப்பட்ட விதத்தாலும், தொழில்நுட்ப ஆக்கத்தாலும் பார்வையாளர்களின் மனதை கனக்க வைக்கிறது. அதேநேரம் இதேபாணியில் வரும் நீண்ட காட்சிகளும், மெதுமான திரைக்கதையும், பாடல்களும், சண்டைக்காட்சிகளும் சிறிது நேரத்திலேயே இந்த திரைமொழி பார்வையாளர்களை சோர்வடையச் செய்கிறது. இடைவேளை காட்சியில் கதையின் மையத்தைத் தொடுகிறது. வடிவேலுவின் நடிப்பும், ஃபஹத் ஃபாசிலின் ஆக்ரோஷமும் கைக்கொடுக்க, படத்தின் திரைக்கதைக்கும் பேசு பொருளுக்கும் முக்கிய காட்சியாக அழுத்தமாக பதிகிறது இடைவேளை காட்சி.

மாமன்னன்

இரண்டாம் பாதியில், தொடக்கத்தில் இருந்தே யூகிக்க கூடிய காட்சிகளால் நிறைந்திருக்கிறது. இரண்டு அரசியல்வாதிகளுக்கு இடையிலான சண்டையாக திரைக்கதை பயணிப்பதும், அவற்றில் புதுமையில்லாது தட்டையாகவே செல்வதும் பார்வையாளர்களுக்கு அயர்ச்சியைத் தருகிறது. பிரதானமாக, இறுதிப்பகுதியில் வரும் தேர்தல், சமூக வலைதள – தொலைக்காட்சி விவாதங்கள், அடிக்கடி ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கும் உதயநிதி போன்றவை மாமன்னனை சாதாரண கமர்சியல் சினிமாவாகிறது. ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ வீட்டில் முறையான பாதுகாப்பு இருக்காதா?, இருதரப்பிற்கும் இடையே இவ்வளவு சண்டைகள் சேதாரங்கள் நடந்தும் காவல்துறை எதையுமே கண்டுக்கொள்ளாதா, முதற்பாதியில் பிரதானமான ஒன்றாக காட்டப்படும் அடிமுறை தற்காப்பு கலை மையமும், கீர்த்தி சுரேஷ் நடத்தும் அந்த கல்வி மையம் இரண்டாம்பாதியில் என்ன ஆனது, ஒரு மாவட்டத்தில் நடக்கும் சாதி ரீதியான வாக்கு அரசியலைப் பற்றி ஒரு முதலமைச்சருக்கு இத்தனை நாட்களாக தெரியாதா போன்ற கேள்விகளும் எழுகின்றன. இவற்றைத் தாண்டி நம்மை ஈர்ப்பது, வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பும், பின்னணியிசையும்தான்.

யூகிக்கப்பட்ட இறுதிக்காட்சிதான் என்றாலும், அதோடு சேர்ந்து வைக்கப்பட்ட திருப்பமும் கைத்தட்டலைப் பெறுகிறது.

சமூக நீதியை முன்வைத்து உதயமான ஒரு அரசியல் இயக்கம், தனது அரை நூற்றாண்டு கால தேர்தல் அரசியல் நடைமுறையின் காரணமாக, சில இடங்களில் சமூகநீதிக்கு எதிரான பாதையில் பயணிப்பது குறித்த நியாயமான விமர்சனத்தை எழுப்புகிறது முதற்பாதி. இரண்டாம்பாதியில், அந்த விமர்சனத்திற்கான பதிலையும், மன்னிப்பையும் அதே அரசியல் இயக்கத்தின் தலைவர் வழியாக சமகால தலைமுறையிடம் வைக்கிறது இரண்டாம்பாதி. ஒரு சமூகநீதி இயக்கத்தின் மீதும், சாதியத்தை சுமக்கும் இந்த சமூகத்தின் மீதும் முற்றாக விமர்சனத்தையும், அவநம்பிக்கையையும் விதைக்காமல், அணைவரையும் உள்ளடக்கிய சமூக மற்றும் அரசியல் மாற்றம் குறித்த உரையாடலை முன்வைக்கும் விதத்தில் இத்திரைப்படம் கவன பெறுகிறது.

மாமன்னன்

“உங்கப்பன நிக்க வைச்சது என்னோட அடையாளம், உன்னை உக்கார வைக்கிறது என்னோட அரசியல்”, “மூணு பேத்த கொன்னுட்டா பயந்து எல்லாரும் நின்றுவாங்கனு நினைக்காத, எதிர்திசையில போறவுங்க முன்னேறி போய்ட்டே இருப்பாங்க” போன்ற வசனங்கள் கைத்தட்டலை பெறுகிறது. மேலும், அய்யா வழி வழிபாடு, அடிமுறை தற்காப்பு கலை, பன்றிக் குட்டி, புத்தர் சிலை, வேட்டை நாய், குதிரையில் வாளுடன் அமர்ந்திருக்கும் ரத்னவேலு என நிறைய குறியீடுகளும் நிறைந்திருக்கின்றன. பலவற்றின் நோக்கம் தெளிவாக இல்லை.

வாழ்வியல் பிரச்னையாக உள்ள சாதிய தீண்டாமையைக் குறித்த படைப்பில், மாமன்னன் மற்றும் ரத்னவேலுவின் சமூகங்களின் வாழ்வியலையும், பொருளாதார/பண்பாட்டு ரீதியாக அவர்களின் சமூகங்கள் இன்றைக்கு என்ன நிலையில் இருக்கின்றன என்பதையும் திரைக்கதை ஓட்டத்தில் சொல்லியிருந்தால், கதையின் அரசியலுக்கு வலுச்சேர்ப்பதோடு, காட்சிகளுக்கு சுவாரஸ்யத்தையும் கூட்டியிருக்கும். அரசியல், சமூக நீதி, என பல விஷயங்களை ஆணித்தரமாக பேசும் மாமன்னன் திரைக்கதையாகவும், காட்சியாகவும் இன்னும் அழுத்தம் கூட்டியிருந்தால் மாமன்னன் மறக்க முடியாதவனாகியிருப்பான்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.