சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் விஜய்யிடம் கதை சொன்னதாக தெரிவித்திருக்கிறார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் மிகுந்த ஆச்சரியமடைந்திருக்கின்றனர்.
இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்து பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். கதிர், யோகி பாபு, கயல் ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. காதலையும், அதன் ஊடாக நடக்கும் சாதிய அட்டூழியங்களையும் பொட்டில் அடித்தாற்போல் படம் பேசியிருந்தது.
கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ்: படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் படத்திலேயே மாரி செல்வராஜ் தான் எவ்வளவு தேர்ந்த படைப்பாளி என்பதை நிரூபித்துவிட்டார் என்றும், சென்சிட்டிவ் விஷயத்தை தொட்டு அதை மிக நேர்த்தியாக படைத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர். குறிப்பாக அந்தப் படம் முடியும்போது அவர் வைத்த க்ளைமேக்ஸ் ஷாட் படம் வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று மாரி செல்வராஜ் மீது பலரது கவனத்தை திருப்பியது. பாரதிராஜாவே அந்த ஷாட்டை பாராட்டியிருந்தது கவனிக்கத்தக்கது.
மாரி கர்ணன்: முதல் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கொடியங்குளத்தில் எளிய மக்கள் மீது அதிகாரவர்க்கத்தினர் நடத்திய அராஜகத்தை மையமாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் ஹிட்டானாலும் பரியேறும் பெருமாளில் இருந்த அடர்த்தி இந்தப் படத்தில் இல்லை என்ற விமர்சனத்தையும் சந்தித்தது. அப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். இருப்பினும் இரண்டு படங்களிலேயே மாரி செல்வராஜ் முன்னணி இயக்குநராகிவிட்டார்.
மாமன்னன்: இப்படிப்பட்ட சூழலில் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இதில் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக வடிவேலுவின் நடிப்பை ரசிகர்கள் சிலாகித்துவருகின்றனர்.
மாரி பேட்டி: இந்நிலையில் மாமன்னன் படத்தின் ப்ரோமோஷனுக்காக மாரி செல்வராஜ் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர் விஜய்யிடம் கதை கூறியதாக தெரிவித்திருக்கிறார். அதுகுறித்து அவர் பேசியதாவது: “விஜய்யின் தீவிர ரசிகரான நான் விஜய்யிடம் கதை கூறியுள்ளேன். விஜய்யை திரையில் பார்த்து ரசித்த எனக்கு அவருக்கு கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது
ஷாக்கான விஜய்: நான் என் பாணியில் ஒரு கதையை விஜய்யிடம் கூறினேன். அவர் கேட்டுவிட்டு ஷாக்காகிவிட்டார். இருந்தாலும் நாங்கள் கண்டிப்பாக எதிர்காலத்தில் இணைவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார். இதனையடுத்து மாரி செல்வராஜுடன் விஜய் இணைந்தால் நிச்சயம் அது தரமான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.