சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என முன்னணி சேனல்கள் தங்களுக்குள்ளான போட்டியை மிகவும் சிறப்பாக எதிர்கொண்டு வருகின்றன.
அடுத்தடுத்த சிறப்பான நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை இந்த சேனல்கள் கொடுத்துவரும் நிலையில், சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையில் போட்டி அதிகமாக காணப்படுகிறது.
கடந்த வாரத்தில் சன் டிவியை பின்னுக்குத் தள்ளிவிட்டு Urban Categoryயில் விஜய் டிவி முதலிடத்தில் இருந்தது. இந்த சேனலில் பாக்கியலட்சுமி தொடர் முதலிடத்தை பிடித்திருந்தது.
Urban categoryயில் முதலிடத்தில் விஜய் டிவி: நிகழ்ச்சிகளுக்கு இணையாக தொலைக்காட்சி தொடர்களையும் ரசிகர்கள் அதிகளவில் பார்த்து வருகின்றனர். வீட்டில் இருக்கும் பெண்கள் தான் அதிகமாக தொலைக்காட்சி தொடர்களை பார்த்துவருவதாக பல்வேறு தரப்பினரும் கூறப்பட்ட நிலையில், தற்போது ஆண்களும் அதிகளவில் சீரியல்களை பார்த்து வருகின்றனர். கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த ஆண்கள் சீரியல்களில் கமிட்டாகியுள்ளனர்.
இந்நிலையில் சீரியல்களை ஒளிபரப்புவதில் சேனல்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நிகழ்ச்சிகள் என்றால் அதிகமாக மெனக்கெட வேண்டும், மண்டையை பிய்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை உள்ள நிலையில், தொடர்களுக்கு அத்தகைய மெனக்கெடல்கள் தேவையில்லை என்பதும் இதற்கு காரணம். சீரியல்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால் அதை தூக்கிவிட்டு அடுத்த தொடரை ஒளிபரப்ப முடியும்.
சீரியல்களில் எவை முன்னணியில் உள்ளது என்பதை கணக்கிட டிஆர்பி உள்ளிட்டவை உதவுகின்றன. இதன்மூலம் எந்த தொடருக்கு ரசிகர்கள் சிறப்பான ஆதரவை கொடுக்கிறார்கள் என்பதை கணக்கிட முடியும். இவற்றில் எந்த சேனல்களின் தொடர்கள் அதிகமாக முன்னணியில் உள்ளது என்பதும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் Urban categoryயிலும் எந்தெந்த தொடர்கள் முன்னிலையில் உள்ளன என்ற பட்டியலும் வாராவாரம் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த வாரத்தில் இந்தப் பட்டியலில் முதலிடத்தை தொடர்ந்து பிடித்துவந்த சன் டிவியை பின்னுக்கு தள்ளிவிட்டு விஜய் டிவியின் சீரியல்கள் முதலிடங்களை பிடித்தன. முதல் ஐந்து இடங்களில் 3வது மற்றும் ஐந்தாவது இடங்களை சன் டிவி பிடித்திருந்த நிலையில் முதல் இரண்டு இடங்களையும் 4வது இடத்தையும் விஜய் டிவி பிடித்து Urban categoryயில் முதலிடத்தை பிடித்தது. இந்த சேனலின் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்த நிலையில் 4வது இடத்தை சிறகடிக்க ஆசை சீரியல் பிடித்திருந்தது.
இந்நிலையில் இந்த வாரத்திற்கான Urban category பட்டியலும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி முதலிடத்தில் தொடர்ந்து விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் 10.4 புள்ளிகளுடன் உள்ளது. இதையடுத்து கடந்த வாரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தன்னுடைய இடத்தை சன் டிவியின் எதிர்நீச்சல் தொடரிடம் விட்டுக் கொடுத்து மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை மற்றும் சன் டிவியின் இனியா தொடர்கள் இடம் பெற்றுள்ளன.
சன் டிவியில் ஆல்யா மானசா லீட் கேரக்டரில் நடித்துவரும் இனியா தொடர், அந்த சேனலின் கயல் தொடருக்கு அடுத்தபடியாகவே தொடர்ந்து இருந்த நிலையில், தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கயல் தொடர் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. ஆனாலும் ஒட்டுமொத்தமாக சன் டிவிதான் 2192.14 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளது. இந்த சேனலுக்கு அடுத்தபடியாக ஸ்டார் விஜய் 1417.96 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில்தான் உள்ளது.