லண்டன், பிரிட்டனில் புரதசத்து பானம் குடித்து 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில், அதுபோன்ற பானங்களில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டும் என, அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுஉள்ளனர்.
ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வந்த ரோஹன் கோதானியா என்ற 16 வயது இந்திய வம்சாவளி சிறுவனுக்கு, 2020, ஆக., 15ல் அவரது தந்தை புரதசத்து நிறைந்த பானமான, ‘புரோட்டீன் ஷேக்’ வாங்கி தந்தார்.
அந்த சிறுவனின் உடல்வாகு வயதுக்கு ஏற்ற சதைப்பிடிப்புடன் இல்லாதததால், உடல் எடை கூடுவதற்காக அந்த பானத்தை அவரது தந்தை வாங்கி தந்ததாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து குடித்த பின், சிறுவனுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. லண்டனில் உள்ள, ‘வெஸ்ட் மிடில்செக்ஸ்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், மூன்று நாளில் உயிரிழந்தார். மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சிறுவன் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சிறுவனின் மரணம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிட்டுள்ளன.
புரதசத்து மிக்க பானங்கள், ஓ.டி.சி., எனப்படும், ‘ஆர்னிதைன் டிரான்ஸ்கார்பமைலேஸ்’ எனப்படும், அரிய வகை மரபணு குறைபாட்டை ஏற்படுத்தி சிறுவனின் ரத்த ஓட்டத்தில், ‘அம்மோனியா’வின் அளவைத் துாண்டி, உயிரிழப்பு வரை கொண்டு சென்றுள்ளது.
இந்த நோய், அம்மோனியாவின் சிதைவைத் தடுக்கிறது. இதனால் ரத்த ஓட்டத்தில், அம்மோனியாவின் அளவு, ஆபத்தான அளவுக்கு உயர்கிறது. அதிக அளவு புரதச்சுமை உடலில் துாண்டப்படுவதால் இந்த நிலை உருவாவதாக தெரியவந்துள்ளது.
எனவே, புரதசத்து பானங்களில் உடல்நிலை குறித்த எச்சரிக்கை வாசகங்களை இடம்பெற செய்வது குறித்து ஒழுங்குமுறை அமைப்புகள் சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement