இலங்கை கடற்படை வரலாற்றில் இரண்டு பெண் அதிகாரிகள் (02) மற்றும் மூன்று பெண் மாலுமிகள் (03) அடங்கிய முதல் பெண் கடற்படை பாராசூட் குழு (21) அம்பாறை விமானப்படை பாராசூட் பயிற்சி பாடசாலையில் தமது அடிப்படை பாராசூட் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
இதன்படி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் கருத்தின் பிரகாரம் கடற்படையில் ஆண் மாலுமிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட துறைகளை பெண் மாலுமிகளுக்கு வழங்கும் வகையில் இந்த அடிப்படை பாரசூட் பாடநெறியை கற்க பெண் மாலுமிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது.
மேலும், பாதுகாப்பு சேவைகள் ஃப்ரீஸ்டைல் பாராசூட் போட்டித்தொடருக்காக இலங்கை கடற்படை பெண்கள் குழவொன்று பாரா ஜம்பர்களுடன் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில், பெண் அதிகாரிகள் மற்றும் பெண் மாலுமிகள் குழுவொன்று இலங்கை விமானப்படை பாராசூட் பயிற்சி பாடசாலைக்கு, அவர்களின் அடிப்படை பாராசூட் பயிற்சிக்காக இணைக்கப்பட்டது. இது தொடர்பான விசேட மன மற்றும் உடல் தகுதிப் பரீட்சைக்கு தகுதி பெற்ற பெண் அதிகாரிகளான – லெப்டினன்ட் இரேஷா மதுஷானி, லெப்டினன்ட் பிரசாதி நதிஷானி மற்றும் பெண் மாலுமிகளான அயேஷா விஜயரத்ன, மஹீஷா ரணசிங்க மற்றும் கௌஷி திசேரா ஆகியோர் 2023 ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 21 ஆம் திகதி வரை அம்பாறை விமானப்படை பாராசூட் பயிற்சி பாடசாலையில் நடைபெற்ற இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்தனர்.
இலங்கை விமானப்படை பாராசூட் பயிற்சி பாடசாலையின் பாடநெறி இலக்கம் 52 இன் கீழ் 43 இராணுவ, வான், கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் ஏனைய தரவரிசைகளை உள்ளடக்கிய இந்த அடிப்படை பாராசூட் பயிற்சி நெறியில், அடிப்படை பாராசூட்களின் பயன்பாடு பற்றிய கோட்பாட்டு மற்றும் நடைமுறை அறிவை வழங்கிய பின்னர், இலங்கை விமானப்படையின் AN 32 விமானத்தில் இருந்து 800 முதல் 1000 அடி வரையிலான உயரத்தில் இருந்து அம்பாறை விமானப்படை தளத்தின் பாராசூட் தரையிறங்கும் பகுதிக்கு ஒரு இரவு குதி மற்றும் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுடன் ஒரு தந்திரோபாய பாராசூட் குதியுடன் ஐந்து (05) குதிகளை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
அவர்களின் அடிப்படை பாராசூட் பாடநெறியை வெற்றிகரமாக முடித்த பின்னர், இலங்கை கடற்படையின் இந்த பெண் பாரா ஜம்பர்கள் குழு ஜூலை 02 ஆம் திகதி அம்பாறை விமானப்படை பாராசூட் பயிற்சி பாடசாலையில் தொடங்க திட்டமிடப்பட்ட ஸ்கைடைவிங் பயிற்சியில் பங்கேற்க எதிர்பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் பெண்களின் திறன்கள் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டும் வகையில், அவர்கள் இலங்கை கடற்படையின் பாராசூட் குளத்துடன் இணைக்கப்பட்டு கூட்டு நடவடிக்கை பயிற்சிகள் மற்றும் பாராசூட் காட்சிகளில் பங்கேற்பார்கள்.