மும்பை: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஜூலை 13, 14-ம் தேதிகளில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியாக போட்டியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார் பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த 23-ம் தேதி எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உட்பட 17 கட்சிகளை சேர்ந்த 32-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த சூழலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மும்பையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், டெல்லி, பஞ்சாப், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்திருக்கிறது. அந்த மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தி வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்கவில்லை.
ஆனால் தேர்தலுக்குப் பிறகு பாஜக ஜனநாயக விரோதமாக ஆட்சியைக் கைப்பற்றியது. உதாரணமாக கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் அந்த மாநிலத்தில் காங்கிரஸை உடைத்து பாஜக ஆட்சி அமைத்தது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியாகப் போட்டியிடும். இதுதொடர்பான முதல் ஆலோசனை கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. அடுத்த கூட்டம் ஜூலை 13, 14-ம் தேதிகளில் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடைபெறும். இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சி நடத்தும் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் அல்லது இமாச்சல பிரதேசதலைநகர் சிம்லாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியானது. தற்போது காங்கிரஸ் ஆட்சி நடத்தும் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.