சென்னை:
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ரூ.4,410 கோடிக்கு முறையாக கணக்கு காட்டவில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி வி.இ. சாலையை தலைமையகமாக கொண்டு தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி. தனியார் வங்கியான இதில் லட்சக்கணக்கானோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த சூழலில், மூன்று தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தலைமையகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த வங்கியில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், “தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ரூ.4410 கோடிக்கு முறையாக கணக்கு காட்டவில்லை. நிதிப் பரிவர்த்தனை அறிக்கையில் முறையாக கணக்கு காட்டாதது ஆய்வில் தெரியவந்துள்ளது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.