ஸ்ரீநகர்: இமயமலைத் தொடரில் தெற்கு காஷ்மீரில் இயற்கையாக தோன்றும் அமர்நாத் பனிலிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித பயணம் மேற்கொள்கின்றனர்.
காஷ்மீரின் பஹல்காம் மற்றும் பால்டால் ஆகிய இரு வழித்தடங்களில் பக்தர்கள் புனித பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்கின்றனர். இந்த ஆண்டுக்கான முன்பதிவு கடந்த ஏப்ரலில் தொடங்கியது. இதன்படி அமர்நாத் புனித யாத்திரைக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
புனித யாத்திரை நாளை தொடங்கி, ஆகஸ்ட் 31-ம் தேதி முடிகிறது. கடந்த ஆண்டு யாத்திரையின் போது உடல்நலப் பிரச்சினைகளால் 42 பேர் உயிரிழந்தனர்.
இதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பக்தர்களின் உணவு வகைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரையை முன்னிட்டுபாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.