புதுடெல்லி: ஆளுநர் ஆர்.என். ரவியை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிஷ் திவாரி வலியுறுத்தி உள்ளார்.
மணிஷ் திவாரி பேட்டி: இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், “ஒருவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதாலேயே அவர் குற்றவாளி அல்ல. குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமே. ஒரு வழக்கில் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும், அதுவும் ஒரு காவல்துறை ஆவணம் மட்டுமே. குற்றம் இழைத்ததாக காவல்துறை நம்பும் விஷயங்களைக் கொண்ட ஆவணம் அது.
அமைச்சராக ஒருவரை நியமிப்பதற்கான அதிகாரம் முதல்வருக்கே இருக்கிறது. அதேபோல், அமைச்சரை நீக்கும் அதிகாரமும் முதல்வருக்கே இருக்கிறது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய நடவடிக்கை, அவர் லட்சுமண ரேகையை கடந்த செயல். இது சட்டப்படியான நடவடிக்கை அல்ல. தனது எல்லை எது என்பது ஆளுநருக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தனது எல்லை எது என்று தெரியவில்லை. இப்படி ஒரு சட்டவிரோத நடவடிக்கையை அவர் எடுத்திருக்கக்கூடாது. தான் அறிந்திருக்க வேண்டிய அரசியல் சாசன அறிவை அவர் அறிந்திருக்கவில்லை என்பது தெளிவாகி இருக்கிறது. அவரை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, உடனடியாக ஆளுநர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
நடவடிக்கையை திரும்பப் பெற்ற ஆளுநர்: முன்னதாக, அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அந்த நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுவதாக ஆளுநர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் அனுப்பி உள்ள கடிதத்தில், “அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையைப் பெறுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, அட்டர்னி ஜெனரலை நான் தொடர்பு கொண்டிருக்கிறேன். அவர் தனது கருத்தை தெரிவிக்கும் வரை, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்குமாறும், ஜூன் 28-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார். பிறகு செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அமலாக்கத் துறையினர் 8 நாட்களுக்கு செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையிலேயே வைத்து விசாரணை நடத்த முதன்மை அமர்வு நீதிபதி அனுமதி அளித்திருந்தார். ஆனால், அவரை மருத்துவமனையில் வைத்து விசாரணை நடத்த முடியவில்லை என்று நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கான நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் அவர் காணொலிக் காட்சி வாயிலாக தனியார் மருத்துவமனையில் இருந்து, நீதிமன்ற விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, ‘‘இப்போது எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு செந்தில் பாலாஜி, ‘‘இன்னும் கொஞ்சம் வலி இருக்கிறது’’ என்றார். இதையடுத்து, செந்தில் பாலாஜிக்கான நீதிமன்றக் காவலை வரும் ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.