சிவகங்கை: இலவச விவசாய மின் இணைப்புக்கு இலக்கு நிர்ணயிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், அனுமதி கிடைத்தும் 2 ஆண்டுகளாக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
தமிழக மின்வாரியம் இலவச விவசாய மின் இணைப்புகளை சாதாரண பிரிவு, சுயநிதி பிரிவு ஆகிய 2 பிரிவுகளில் வழங்குகிறது. சுயநிதி பிரிவில் ரூ.10,000, ரூ.25,000, ரூ.50,000 என மூன்று வகை கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. இதுதவிர தட்கல் திட்டம் மூலமாகவும் இணைப்பு வழங்கப்படுகிறது. தட்கல் திட்டத்தில் மோட்டாரின் குதிரை திறனுக்கு ஏற்ப, ரூ.2.5 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றதும் 2013 மார்ச் 31-ம் தேதி வரை பதிவு செய்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க அனுமதி வழங்கியது. முதற்கட்டமாக 2021-22-ம் ஆண்டில் ஒரு லட்சம் பேர் இலக்காக நிர்ணயித்து, இணைப்பு கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2022-23-ம் ஆண்டில் 50,000 பேர் இலக்காக நிர்ணயித்து, இணைப்பு கொடுக்கப்பட்டது. எனினும் 2013 மார்ச் 31-ம் தேதி வரை பதிவு செய்த விவசாயிகளுக்கு முழுமையாக கொடுக்க முடியவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 485 பேருக்கு வழங்கவில்லை.
மேலும் ஜூன் மாதம் முடிவடைந்தும் இதுவரை 2023-24-ம் ஆண்டுக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை. இதனால் மீதியுள்ளவர்களுக்கு இணைப்பு கொடுக்க முடியாதநிலை உள்ளது. இதுகுறித்து கீழநெட்டூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் அய்யாச்சாமி கூறுகையில், “தளவாடங்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் மின் இணைப்பு கொடுக்காமல் தாமதித்து வருகின்றனர். இதனால் அனுமதி கிடைத்தும் 2 ஆண்டுகளாக இணைப்புக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்” என்று கூறினார்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், “இலக்கு நிர்ணயித்து அரசு அறிவித்ததும் இணைப்பு கொடுக்கப்படும். மேலும் தட்கல் திட்டத்தில் 262 இணைப்புக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதுதவிர இதர அரசு திட்டத்திலும் 22 இணைப்புகள் கொடுக்கப்பட உள்ளன” என்று கூறினர்.