இம்பால்: இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ள ராகுல் காந்தி நிவாரண முகாம்களில் தங்கியிருந்தவர்களை சந்தித்தது பற்றிய அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “அங்கே (நிவாரண முகாம்கள்) நான் பார்த்த ஒவ்வொரு சகோதரர், சகோதரி, குழந்தையின் முகத்திலும் உதவிக்கான கூக்குரல் ஒலிக்கிறது. மணிப்பூரின் இப்போதைய முக்கியத் தேவை அமைதி. மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மணிப்பூரில் உடனடியாக அமைதியை நிலைநாட்ட வேண்டும். நம் அனைவரின் முயற்சிகளும் அமைதியை நிலைநாட்டும் வகையில் ஒன்றிணைய வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் வசிக்கும் மைதேயி வகுப்பினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு குகி பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கடந்த 2 மாதங்களாக அங்கு இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வன்முறைக்கு 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக நேற்று மணிப்பூர் தலைநர் இம்பால் சென்றடைந்தார். அங்கிருந்து கலவரத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட சூரசந்த்பூருக்கு பாதுகாப்பு வாகனங்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது பாதுகாப்பு வாகனத்தை விஷ்ணுபூர் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, மீண்டும் இம்பால் திரும்பிய ராகுல் காந்தி, ஹெலிகாப்டர் மூலம் சூரசந்த்பூர் சென்றார். அங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருப்பவர்களை ராகுல் சந்தித்துப் பேசினார். இந்நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தது குறித்து ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.