சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வாகன நிறுத்தம் கட்ட திட்டமிட்டுள்ள இடத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் இல்லாத இரண்டு கல்லறைகளை வேறு இடத்துக்கு மாற்றுபடி மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய சட்டக் கல்லூரி அருகில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர் எலிஹு யேல் என்பவரின் மகன் டேவிட் யேல், நண்பர் ஜோசப் ஹிம்னெர்ஸ் ஆகியோரின் கல்லறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வரும் வழக்கறிஞர்கள், வழக்காடிகள், காவல் துறையினர், பொதுமக்கள், சட்டக்கல்லூரிகளின் மாணவர்கள், பாதுகாப்பு படையினர் ஆகியோரின் வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தமும், சட்டக்கல்லூரி கட்டடத்தில் நீதிமன்றங்களும் அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.
ஆனால் பாதுக்காக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அந்தக் கல்லறைகள் இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டு உள்ளதால், வாகனங்கள் நிறுத்துமிட கட்டுமான பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளதால், அந்த கல்லறைகளை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டுமென்ற கோரிக்கையுடன் பி.மனோகரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், மத்திய தொல்லியல் துறை தரப்பில், 1684 – 1688 ஆம் ஆண்டுகளுக்கிடையே கட்டப்பட்ட இரண்டு கல்லறைகளும் 1921ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன என்றும், தொல்லியல் மற்றும் நினைவுச் சின்னங்கள் சட்டத்தின்படி நினைவுச்சின்னங்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதால், இரு சமாதிகளையும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை நிராகரித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி பிறப்பித்துள்ள உத்தரவில், ”தொல்லியல் துறை சட்டத்தின்படி ஒரு இடத்தை புராதன சின்னமாகவோ, பாதுக்காக்கப்பட்ட நினைவுச் சின்னமாகவோ அறிவிப்பதற்கு, நூறு ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்க வேண்டும் என்பது மட்டும் அல்லாமல், அந்த இடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், கலை நயமிக்கதாகவும், தொன்மையானதாகவும் இருக்க வேண்டும் என தெளிவுபடுத்தி உள்ளார்.
ஆனால் இரண்டு கல்லறைகளும் நூறாண்டுகளுக்கு முன்பாக கட்ட்பபட்டுள்ளன் என்பதை தவிர, வேறு வரலாற்று முக்கியத்துவமோ, கலைநயமோ கிடையாது எனக் கூறி, நான்கு வாரங்களில் இந்த கல்லறைகளை வேறு இடத்துக்கு மாற்ற இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
புராதன சின்னங்கள் சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள தேசிய நினைவுச் சின்னங்கள் ஆணையம், அவ்வப்போது நினைவுச் சின்னங்களை ஆய்வு செய்து பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவித்ததை ரத்து செய்வது தொடர்பாக அரசிடம் பரிந்துரைகளை வழங்க வேண்டுமென்று போதும், அவ்வாறு செயல்படவில்லை” என நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயே ஆட்சிகாலத்தில் பிறப்பித்த உத்தரவை சுதந்திரத்திற்கு பிறகும் தொடர அவசியம் இல்லை என்றும், அவ்வாறு தொடர்வது அடிமை மனப்பான்மை இன்னும் அதிகாரிகள் மனதிலிருந்து அகலவில்லை என்பதையே காட்டுகிறது எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.