வாஷிங்டன்: அமெரிக்கா, சீனா இடையே கடும் மோதல் உள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்காவின் வான் எல்லையில் பறந்த சீனாவின் உளவு பலூன் சமீபத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில் தான் எதிராளியான அமெரிக்காவின் பொருளை எடுத்து அவனையே சீனா உளவு பார்த்து போட்டு தள்ள முயன்ற ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல்போக்கு உள்ளது. இருநாட்டு தலைவர்களும் ஒருவைரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர். இதற்கிடையே தான் கடந்த ஜனவரி 28ம் தேதி அமெரிக்காவின் வான்பரப்பில் மர்மமான பலூன் ஒன்று பறந்து கொண்டிருந்தது.
இது உளவு எதிரி நாட்டை சேர்ந்தவர்கள் உளவு பார்க்க பயன்படுத்தியதாக அமெரிக்கா நினைத்தது. மேலும் இந்த பலூன் குறித்து அமெரிக்கா விசாரணை நடத்தியது. விசாரணையின் அது சீனாவை சேர்ந்தது என்பது தெரியவந்தது.
இதனால் தங்களின் வான் எல்லையில் சீனா பலூன் பறக்கவிட்டு உளவு பார்த்ததாக அமெரிக்கா பகிரங்கமாக குற்றம்சாட்டியது.ஆனால் சீனா அதனை முற்றிலுமாக மறுத்தது. அதோடு இது வானிலை முன்னறிவிப்புகளை அறிய பயன்படுத்தப்படும் பலூன் தான், திசைமாறி அமெரிக்க வான் எல்லைக்குள் நுழைந்ததாக சீனா தெரிவித்தது.
ஆனால் அமெரிக்கா நம்பவில்லை. மாறாக உளவு பலூனை மீட்க சுட்டு வீழ்த்த அமெரிக்கா முடிவு செய்தது. அதன்படி அமெரிக்காவின் மான்டனா மாகாணத்தின் மேல் பகுதியில் இந்த பலூன் பறந்தபோது கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. மால்ஸ்ட்ரோம் விமானப் படைத் தளத்தில் அமெரிக்காவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பயன்படுத்தி அமெரிக்கா அந்த பலூனை சிதற செய்தது.
இந்நிலையில் தான் சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் எதிராளியான அமெரிக்காவின் பொருளை எடுத்து அவைனையே போடுறது இதுதான் என்பது போல் சீனா பக்காவாக ஸ்கெட்ச் போட்டு ஆப்பு வைத்திருந்ததும் தெரியவந்தது. அதாவது சீனாவின் உளவு பலூனை அமெரிக்க சுட்டு வீழ்த்தியபோது அதன் பாகங்கள் அமெரிக்காவின் கரோலினா பீச் நகரம் அருகே கடல் பகுதியில் விழுந்தது.
அந்த பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வை அமெரிக்க பாதுகாப்பு பிரிவு மற்றும் புலனாய்வு அமைப்பினர் மேற்கொண்டனர். அப்போது தான் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது சீனா அதனை உளவு பலூனாக பயன்படுத்தியதும், குறிப்பாக ஆடியோ-விஷூவல் தொடர்பான தகவல்களை சேகரிக்க பயன்படுத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பலூனின் யுஎஸ் கியர், சீன சென்சார்கள் உள்பட பல உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது. இதன்மூலம் உளவு பலூன் போட்டோ, வீடியோ உள்ளிட்டவற்றை சீனாவுக்கு சேகரித்து அனுப்பும் பணியை செய்துள்ளது. இவ்வாறு அந்த பலூன் உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோடு உளவு பணிக்காக அந்த பலூனின் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் அமெரிக்காவினுடையது என்பதும் கண்டறியப்பட்டது.
இதனை அறிந்து அமெரிக்க உண்மையிலேயே ஷாக்காகி போயுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த பலூன் அமெரிக்காவின் அலாஸ்கா, கனடா, உள்ளிட்ட சில இடங்களில் பறந்த 8 நாட்களில் எந்த தகவல்களையும் சீனாவுக்கு அனுப்பவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை மற்றும் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனிடம் கேட்டபோது அவர்கள் எந்த தகவல்களையும் கூற மறுத்துவிட்டதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை தற்போது செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.