தி.மு.க அமைச்சர் மீதான பணமோசடி வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றிரவு செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்தது தி.மு.க-வினரிடையே பெரும் எதிர்ப்பைத் தூண்டியது. பின்னர் உத்தரவு பிறப்பித்த சில மணிநேரங்களிலேயே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் செந்தில் பாலாஜி பதவி நீக்க உத்தரவை நிறுத்திவைத்தார் ஆளுநர்.
இருப்பினும், முதல்வரின் எந்தவொரு பரிந்துரையும் இல்லாமல் ஒரு அமைச்சரைப் பதவி நீக்கம் செய்வதென்பது அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என தி.மு.க-வும், அதன் கூட்டணி கட்சிகளும் சாடிவருகின்றன. முதல்வர் ஸ்டாலின் கூட, “அமைச்சரைப் பதவி நீக்கம் செய்வதற்கு ஆளுநருக்கு அதிகாரமில்லை” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, `இன்னும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத வழக்கில் அவரை தகுதி நீக்கம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தி.மு.க எம்.பி-யும், வழக்கறிஞருமான வில்சன் ஆகியோருடன் செய்தியாளர்களைச் சந்தித்த தங்கம் தென்னரசு, “செந்தில் பாலாஜி விவாகரத்தில் அவரைப் பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு சட்டப்படி எந்த அதிகாரமும் கிடையாது. அமைச்சரை நியமிப்பதோ, நீக்குவதோ அதற்கான தனிப்பட்ட அதிகாரம் முதலமைச்சருக்கு மட்டுமே இருக்கிறது. முதலமைச்சரின் பரிந்துரை இல்லாமல் அமைச்சரே நியமிக்கவோ, நீக்கவோ முடியாது என்பதை தெரிந்து கொண்டே ஆளுநர் வேண்டுமென்றே இந்த செயலில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது அது ஒன்றிய உள்துறை அமைச்சராலேயே சுட்டிக் காட்டப்பட்டுவிட்டது.
இல்லாத பூனையை இருட்டு வீட்டுக்குள் தேடுவதைப் போல பிரச்னையை உருவாக்க வேண்டும் என்று அவர் இருக்கிறார். தி.மு.க-வைப் பார்த்து போகிற போக்கில் புழுதி வாரி தூற்றக்கூடிய செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். செந்தில் பாலாஜியை மட்டும் தனிமைப்படுத்தி ஒரு குற்றச்சாட்டில் சிக்கவைக்க வேண்டிய அவசியம் என்ன… குற்றம் சாட்டப்பட்டுவிட்ட காரணத்தினாலேயே அவருக்கு தகுதி நீக்கம் வந்துவிடாது. இன்னும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கபடாத வழக்கில் அவரை தகுதி நீக்கம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது.
இன்றைக்கு கூட ஒன்றிய அமைச்சர்களாக இருப்பவர்கள் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அவர்கள் இன்றும் ஒன்றிய அமைச்சரவையில் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் நீக்கம் செய்துவிட்டீர்களா… எனவே, செந்தில் பாலாஜி மீது மட்டும் அவசர அவசரமாக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏன் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வெறுமனே அவர் மீது நடவடிக்கை எடுக்க முயல்வது நிச்சயம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. அதுமட்டுமல்லாமல் தற்போது, தான் எடுத்த நடவடிக்கையை தானே நிறுத்திவைக்கிறார் ஆளுநர்.
இந்த மாதிரியான விஷயங்களை தி.மு.க சட்டபூர்வமாகவே சந்தித்து வந்திருக்கிறது. அதனால் எங்களுக்கு யாரும் எந்தவிதமான நெருக்கடிகளையும் கொடுத்துவிட முடியாது. எந்த ஆயுதத்தை எப்போது எடுக்கவேண்டுமென்பதை நாங்கள் முடிவுசெய்வோம். அதோடு, ஆளுநருக்கு எந்த அளவுக்கு மரியாதையை கொடுக்கவேண்டும் என்பதில் எந்த காலகட்டத்திலும் முதல்வர் குறைத்துக்கொண்டது இல்லை” என்று கூறினார்.
மேலும், இந்த செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க எம்.பி-யும், வழக்கறிஞருமான வில்சன், “செந்தில் பாலாஜியிடம் விசாரணை மட்டுமே நடந்துவருவதால் அவரை பதவி நீக்கம் செய்யத் தேவையில்லை” என்று தெரிவித்தார்.