இம்பால்: தொடர் வன்முறையின் காரணமாக மணிப்பூர் முதல்வர் பதவியை பீரன் சிங் ராஜினாமா செய்ய இருந்தார். இதையடுத்து அவரது ராஜினாமா கடிதத்தை ஆதரவாளர்கள் கிழித்தெறிந்த நிலையில் தான் பீரன் சிங் பரபரப்பான ட்விட்டர் பதிவு ஒன்று செய்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்துக்கு கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்றது. இதன்மூலம் அங்கு பாஜக ஆட்சியை தக்கவைத்தது. 2வது முறையாக பீரன் சிங் முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் தான் கடந்த மாதம் 3ம் தேதி முதல் மணிப்பூரில் வன்முறை நடந்து வருகிறது.
அதாவது குக்கி இனக்குழுவினரைப் போல தங்களையும் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என மைத்தேயி பிரிவு மக்கள் வலியுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுதொடர்பாக குக்கி-மைத்தேயி மக்கள் இடையேயான பிரச்சனை தான் வன்முறையாகி உள்ளது.
இந்த வன்முறை கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் மாநிலத்தை விட்டு வெளியேறியுள்ள நிலையில் பல ஆயிரம் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வன்முறையை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. இந்நிலையில் தான் மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு பொறுப்பேற்று மணிப்பூர் முதல்வர் பீரன் சிங் இன்று ராஜினாமா செய்வதாக காலையில் செய்திகள் பரவின. பாஜக மேலிட உத்தரவை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்வதாக கூறப்பட்டது.
இதையடுத்து இம்பாலில் உள்ள பீரன் சிங்கின் வீடு முன்பு ஆதரவாளர்கள் குவிந்தனர். பீரன் சிங் ராஜினாமா செய்ய அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பீரன் சிங்கின் ராஜினாமா கடிதத்தை அவர்கள் கிழித்து எரிந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் தான் மணிப்பூர் முதல்வர் பீரன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛இது முக்கிய தருணம். மணிப்பூர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்” என தெரிவித்துள்ளார். இதன்மூலம் மணிப்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.