லக்னோ: உ.பியில் என்கவுன்ட்டர்கள் அதிகம் நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், குற்றங்களை குறைக்கத்தான் என்கவுன்ட்டர்கள் நடத்தப்படுகிறது என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விளக்கமளித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக கடந்த 2017ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதனையடுத்து கடந்த 2022ம் ஆண்டு தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அவர் முதலமைச்சராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்ததை பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது.
ஏனெனில் இதற்கு முன்னர் மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்திருந்தவர்கள் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் பதவியில் இருந்ததில்லை. எனவே யோகி ஆதித்யநாத் புதிய சாதனையை படைத்திருக்கிறார். இதனையடுத்து பாஜக யோகி ஆட்சியின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றிருந்த நிலையில் எதிர்க்கட்சியினர் முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
அதாவது யோகி பொறுப்பேற்ற 6 ஆண்டுகளில் சுமார் 10,713 என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளதாகவும் அதில் 178 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து விளக்கமளித்துள்ள யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேசத்தில் மாஃபியாக்களின் ஆட்சி அடக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் “இந்த என்கவுன்ட்டர் காரணமாகதான் மாநிலத்தில் பாலியல் குறங்கள், கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்கள் மீதான தாக்குதல் போன்ற குற்றங்கள் குறைந்திருக்கிறது.
அதேபோல சமூக விரோதிகளிடமிருந்து சுமார் ரூ.4,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. மாநிலம் நவீனமயப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு இடையூறாக உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலம் தற்போது 1 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது.
கடந்த ஆட்சியில் உத்தரப் பிரதேசத்தில் வழிப்பறி, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், கடத்தல் ஆகிய சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்றன. ஆனால் பாஜக ஆட்சியி8ல் அப்படி இந்த குற்றங்கள் குறைந்திருக்கின்றன. இதற்கு என்கவுன்ட்டர்கள்தான் முழு காரணம். தற்போது மாஃபியாக்கள் உயிருக்கு பயந்து காவல்துறையினரிடம் சரணடைந்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.