சென்னை:
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீக்கி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனல் பறக்கும் கடிதத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ளார்.
ஆளுநர் செய்தது சரியா? நாராயணன் திருப்பதி கருத்து (பாஜக)
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு தற்போதுதான் பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. இந்த சூழலில், பல்வேறு குற்ற வழக்குகள் செந்தில் பாலாஜி மீது இருப்பதை காரணம் நேற்று அதிரடியாக அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார் ஆளுநர் ஆர்.என். ரவி. இந்தியாவிலேயே ஒரு அமைச்சரை ஆளுநர் நீக்கியது இதுவே முதன்முறை ஆகும்.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் கடுமையாக எதிர்வினை ஆற்றினர். தனது அதிகாரம் என்னவென்று தெரியாமலேயே ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார் என திமுகவினர் அவரை கடுமையாக விமர்சித்தனர்.
இதனிடையே, தான் பிறப்பித்த உத்தரவை நேற்று நள்ளிரவே திடீரென நிறுத்தி வைத்தார் ஆளுநர் ரவி. ஒரு நடவடிக்கையை எடுத்துவிட்டு பின்னர் அதில் இருந்து பின்வாங்கியதால் ஆளுநர் மீது பாஜகவினரே அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு இன்று மாலை கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், “இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. அரசமைப்புச் சட்டப்படி அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. ஆளுநர் கூறியுள்ள கருத்துகள் அரசியல் சாசனத்திற்கு எதிராக இருக்கின்றன.
யாரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்பது முதல்வரின் உரிமை. அமைச்சர் பொறுப்பில் புதிதாக ஒருவரை சேர்ப்பதும், நீக்குவதும் முதல்வரின் முடிவுக்கு உட்பட்டது. பதவிப் பிரமாணம் செய்து வைக்க மட்டுமே ஆளுநருக்கு உரிமை உள்ளது. முதல்வர் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு உரிமை கிடையாது” என அந்தக் கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.