‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சுரேஷ் சங்கையா. கிடாய் வெட்டப்போன இடத்தில் நடக்கும் ஒரு சம்பவமும், அதைத் தொடர்ந்து அரங்கேறும் கலாட்டாக்களுமாக, படத்தின் கதை உங்களுக்கு நினைவில் இருக்கும்.
சுரேஷ் சங்கையா, இப்போது தன் அடுத்த படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படத்தின் பெயர் ‘சத்திய சோதனை.’ கதையின் நாயகனாக பிரேம்ஜி நடித்திருக்கிறார்.
”தமிழ் சினிமாவுல போலீஸ் ஸ்டேஷன்னா ஒரு செட்டப் இருக்கும். உள்ளே நடக்கற விஷயம் பரபரப்பாகவும் பத்திக்கற மாதிரியும் இருக்கும். ஆனா, நிஜம் வேற. அதிலும் கிராமத்துக் காவல் நிலையங்கள், அவ்ளோ இயல்பும் யதார்த்தமுமா இருக்கும். எந்த கிராமத்துல போலீஸ் ஸ்டேஷன் இருக்குதோ, அங்கே வேலை செய்யுற போலீஸ்காரங்க பக்கத்து ஊர்க்காரங்களாகத்தான் இருப்பாங்க.
அதான் யதார்த்த நிலை. இப்படி ஒரு பின்னணியில் உருவான கதைதான் இது. இந்தப் படத்தில் பிரேம்ஜி அமரன், ‘ஆட்டோ சங்கர்’ வெப்சிரீஸ்ல நடிச்ச ஸ்வயம் சித்தா, ‘ஜித்தன்’ மோகன், கு.ஞானசம்பந்தன், ‘ஒரு கிடாயின் கருணை மனு’ முருகன்னு கதைக்கான ஆட்கள் நிறையபேர் இருக்காங்க. ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ ரகுராம் இசையமைப்பாளராக கமிட் ஆனார். அருமையான பாடல்கள் கொடுத்திருக்கார். அதன் பிறகு, படம் முடியற சமயத்துல அவர் உடல்நலம் குன்றி இறந்துட்டதால, பின்னணி இசையை வேறொருவரை வச்சுப் பண்ணவேண்டியதாகிடுச்சு.
தீபன் சக்கரவர்த்தியோட பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்த்திருக்கு. என் முதல் படம் 2017-ல் வெளியானது. ஆனா, இரண்டாவது படம் இப்பதான் வெளியாகப்போகுது. இடையே ஏன் இத்தனை வருஷ இடைவெளின்னு நிறைய பேர் கேட்டிருக்காங்க. அவங்களுக்கான பதில்தான் இது.
‘கிடாயின் கருணை மனு’ படத்தை முடிச்சதும், உடனே இந்தக் கதையை எழுதல. வேறொரு கதையைத்தான் ரெடி பண்ணினேன். இன்னும் சொல்லப்போனால், ஒரே சமயத்துல ரெண்டு கதைகள் பண்ணுறதுல கவனம் செலுத்தினேன். அதுல ஒரு கதை வித்தியாசமான கதை. என் லெவல்ல பட்ஜெட் கொஞ்சம் பெருசுன்னு சொல்லக்கூடிய அளவிலான ஒரு கதை. வயதான ஒரு மனிதரைப் பத்தின கதை அது.
ராஜ்கிரண் மாதிரியான பிரபலமான ஒருத்தருக்கான கதை அது. ஆனா, அந்தக் கதைக்கான பட்ஜெட்ல படம் பண்ணினால், அதுக்கான பிசினஸ் இருக்காதுன்னு அந்தக் கதைக்கு தயாரிப்பாளர்கள் அமையாமலே இருந்தாங்க. இன்னொரு பக்கம், ஒரு தயாரிப்பாளர் கமிட் ஆகி, ஒன்றரை வருஷம் காத்திருக்க வேண்டிய சூழல். இந்நிலையில்தான் இந்தக் கதையைக் கையிலெடுத்தேன். என் முதல் படம் பண்ணுறதுக்கு முன்னாடி, ‘இது கதையா நல்லா இருக்கு. ஆனா, இதை எப்படி படமா பண்ணப் போறீங்க?’ன்னு பலரும் கேட்டாங்க. அதே போராட்டத்தை இந்தக் கதைக்கும் சந்திச்சேன்.
ஒரு வழியாக, நல்ல தயாரிப்பாளர் அமைந்து படத்தை எடுக்கும் போது, கொரோனா காலகட்டம் தொடங்கிடுச்சு. அதுல ரெண்டு வருஷம் எதுவும் பண்ண முடியாமல் காலம் போச்சு. இப்படி பல தடைகளைத் தாண்டி வந்திருக்கோம். இப்ப படமும் ரெடியாகிடுச்சு. ‘சத்தியசோதனை’ அடுத்த மாதம் திரைக்கு வருகிறது” எனச் சொல்லும் சுரேஷ் சங்கையா, இதையடுத்தும் ஒரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அதில் நகைச்சுவை நடிகர் செந்தில்தான் கதை நாயகன். அந்தப் படத்தின் டைட்டிலையும் விரைவில் அறிவிக்கவுள்ளார் சங்கையா!