இங்கு நம்மில் பல பேர் சிங்கத்தை நேரில் பார்த்ததில்லை என்றாலும்கூட, சிங்கத்தின் கர்ஜனைப் பற்றியும், அதன் வலிமையைப் பற்றியும் நிச்சயம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், திடீரென சிங்கம் ஒன்று நம் முன்பு வந்தால் என்னவாகும் என்பதை யோசிக்கும்போதே, நாம் பீதியடைந்துவிடுவோம்.
இவ்வாறிருக்க குஜராத்தில் விவசாயி ஒருவர், சாலையில் தன்னுடைய பசுவைத் தாக்கிக்கொண்டிருந்த சிங்கத்தைத் தைரியமாக, அசால்ட்டாக விரட்டிய சம்பவம் பலருக்கும் திகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தை அந்தச் சாலை வழியே காரில் சென்ற பயணி ஒருவர் வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அது தற்போது, சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகிவருகிறது.
விவேக் கொட்டாடியா என்பவர் பதிவிட்ட அந்த வீடியோவில், சாலையொன்றில் சிங்கம் ஒன்று பசுவின் கழுத்தைக் கவ்விக்கொண்டு தாக்கிக்கொண்டிருக்கிறது. எப்படியாவது பசுவைத் தனக்கு இரையாக்கிவிட வேண்டும் என்று தொடர்ந்து பசுவைத் தாக்கிக்கொண்டிருக்கும் சிங்கம், பசுவின் கழுத்தைப் பிடித்தவாறே சாலையோரமாக இழுத்துச் செல்கிறது.
பசுவை, சிங்கம் தாக்கிக்கொண்டிருப்பதை சற்று தூரத்தில் பார்த்துக்கொண்டிருந்த விவசாயி, பொறுமையாக எந்த அவசரமும் காட்டாமல் தைரியமாகப் பசுவையும், சிங்கத்தையும் நோக்கி வருகிறார். சிங்கம் விடாமல் பசுவின் கழுத்தைக் கவ்வி இழுத்துக்கொண்டிருக்க, அந்த விவசாயி சாலையோரத்தில் கீழே கிடந்த பொருள் ஒன்றை எடுத்துக்கொண்டு அவற்றை நோக்கிவந்ததும் சிங்கம், பசுவின் கழுத்தை விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிச் சென்றது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு இணையதளவாசிகள் பலரும், அந்த விவசாயியின் தைரியத்தைப் பாராட்டி வருகின்றனர்.