தமிழ்நாடு அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கி வெளியிட்ட உத்தரவை ஆளுநா் ஆா்.என்.ரவி நள்ளிரவில் நிறுத்திவைத்துள்ளாா்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது செய்யப்படுவதாலோ, வழக்கு நிலுவையில் இருப்பதாலோ அமைச்சர் ஒருவரை பதவி நீக்கம் செய்ய முடியாது என கூறப்படும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி நேற்று (ஜூன் 29) உத்தரவிட்டார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டஅறிவிப்பில், “அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, வேலை வாங்கி தருவதாக, பணமோசடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகள், கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி, தன் மீதான விசாரணைக்கும் அவர் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். தற்போது நீதிமன்ற காவலில் அமலாக்கத் துறை விசாரணையில் உள்ளார்.
அதுமட்டுமில்லாமல், தமிழக காவல் துறையிலும் அவர் மீது சில வழக்குகள் உள்ளன. இதனால் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். இந்நிலையில், அவரை, அமைச்சரவையில் இருந்து, ஆளுநர் உடனடியாக நீக்கியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டது. இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
“செந்தில் பாலாஜி வாயை திறந்தால் மாட்டிப்பாங்க”
இது தொடர்பாக பேசிய முதலமைச்சர்
, “அமைச்சர் பதவியிலிருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இதை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நள்ளிரவில் ஆளுநர் ஆர்.என்.ரவி அட்வகேட் ஜெனரலை கலந்தாலோசித்த பிறகு, அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் முடிவு குறித்து தீா்மானக்கப் போவதால், நீக்கும் உத்தரவை நிறுத்திவைக்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.