பெங்களூரு: ஒரு சில ட்வீட்கள் மற்றும் கணக்குகளை முடக்கச் சொன்ன மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து ட்விட்டர் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதோடு, அரசின் உத்தரவை பின்பற்றாத ட்விட்டருக்கு 50 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளது உயர் நீதிமன்றம்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணா, சமூக வலைதளங்களில் கருத்துகளை, பதிவுகளை தடை செய்யும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்றும் ட்விட்டர் நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். அபராதத் தொகையை 45 நாட்களுக்கு செலுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு 5,000 ரூபாய் வீதம் அபராத தொகையில் கூடும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பில்லியன் டாலர் நிறுவனம். ஒரு நாட்டின் சட்ட திட்டத்திற்கு ஏற்ப இயங்குவது அவசியம் என்பதை அறிந்திருக்கும். அந்நிறுவனம் ஒன்றும் அந்த விவரங்கள் அறியாத சாமானியன் அல்ல எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அசோக் ஹரனஹள்ளி, அரவிந்த் தாதர் மற்றும் மனு குல்கர்னி ஆகியோர் வாதிட்டனர். மத்திய அரசு தரப்பில் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர். சங்கரநாராயணன் ஆஜரானார்.
‘ஒரு பயனரின் கணக்கை முடக்க வேண்டுமென்றால், அதற்கான முறையான காரணத்தை பயனரிடம் தெரிவிக்க வேண்டும். அதனால் அரசு அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டியது அவசியம்’ என ட்விட்டர் தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. ‘தேசத்தின் நலன் மற்றும் பொது அமைதி கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த கணக்குகளால் வன்முறை ஏற்படும் நிலை இருந்தது’ என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
80-க்கும் மேற்பட்ட ட்வீட்கள் மற்றும் கணக்குகளை நீக்குக: கடந்த 2021-ல் மத்திய அரசு தரப்பில் ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதில் சுமார் 80-க்கும் மேற்பட்ட ட்வீட்கள் மற்றும் கணக்குகள், 39 யூ.ஆர்.எல்-களை நீக்குமாறு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் இருதரப்புக்கும் இடையே முரண் ஏற்பட்டது. அரசு குறிப்பிட்ட ட்வீட் மற்றும் கணக்குகளில் சில விவசாய ஆர்வலர்கள், பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அடங்கி இருந்தனர். இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2000-இன் கீழ் சம்பந்தப்பட்ட அமைச்சகம் இந்தக் கோரிக்கையை வைத்தது.
ஆனால், காலம் தாழ்த்திய நிலையில், அதை திட்டவட்டமாக தடை செய்ய மறுத்துவிட்டது ட்விட்டர். அதற்கு அப்போது கருத்து சுதந்திரத்தை மேற்கோள் காட்டி இருந்தது அந்நிறுவனம். மத்திய அரசும் அப்போது எதிர்வினை ஆற்றி இருந்தது.
குற்றச் செயல்களைத் தூண்டும் விதமான பதிவுகளைக் கருத்துச் சுதந்திரம் என்று எடுத்துக்கொள்ள முடியாது எனவும், சட்டம் – ஒழுங்குக்கு அச்சுறுத்தலாகவே கருத வேண்டும் என்றும் ட்விட்டரிடம் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்திருந்தது. இது அரசுக்கு பெரிய அளவில் நெருக்கடி கொடுத்தது. தொடர்ந்து ட்விட்டருக்கு மாற்றாக வேறு ஒரு சமூக வலைதளம், அதுபோலவே இந்தியாவில் உருவாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை ட்விட்டர் தரப்பு நாடியது.
ஜாக் டோர்ஸி குற்றச்சாட்டு: கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரேக்கிங் பாயிண்ட் யுடியூப் நேர்காணல் நிகழ்ச்சியில், விவசாய போரட்டத்தின் போது அரசுக்கு எதிரான பதிவுகளை நீக்க இந்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்ஸி கூறியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்ததையடுத்து, ட்விட்டர் நிறுவனம் இந்தியாவில் முடக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபக்கம் ட்விட்டரின் தற்போதைய உரிமையாளர் எலான் மஸ்க், உள்நாட்டு சட்டங்களை சமூக வலைதளங்கள் மதிப்பது அவசியம் என தெரிவித்திருந்தார்.
All platforms hv to be in compliance with Indian law n @Twitter under @jack repeatedly refused to do so. In response to @GoI_MeitY ‘s notice for non-compliance they approached Karnataka High Court n judgement
Karnataka High Court has dismissed the petition filed by…
— Rajeev Chandrasekhar (@Rajeev_GoI) June 30, 2023