தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று மதியம், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்றைய தினம் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருந்தார். பின்னர் அந்த உத்தரவை அவரே தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார். ஓர் அமைச்சரை, அமைச்சரவையிலிருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதற்குள் பா.ஜ.க செல்ல விரும்பவில்லை. 1979-ம் ஆண்டு நடந்த ‘கருணாநிதி வெர்சஸ் யூனியன் ஆஃப் இந்தியா’ வழக்கு விசாரணையில், குறிப்பிட்ட அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று அன்றைய உச்ச நீதிமன்ற நீதிபதி பசல் அலி பதிவுசெய்திருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ‘ஊழல் வழக்குகள் இருப்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குட்கா புகழ் அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அப்படி செய்யாமல், தயங்கினால், ஆளுநர் முன்வந்து அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்’ என ட்விட்டரில் ட்வீட் செய்திருக்கிறார். ஆனால், தற்போது இவர்களே ஆளுநரின் நடவடிக்கையை கேள்வி எழுப்புகின்றனர். ஊழல் குற்றச்சாட்டு இருக்கும் அனைத்து அமைச்சர்களின்மீதும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை. `மாநில அரசை கேடயமாகப் பயன்படுத்தி செந்தில் பாலாஜி தப்பிக்கப் பார்க்கிறார்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியதைத் தொடர்ந்தே ஆளுநர் நடவடிக்கை எடுத்தார்.
செந்தில் பாலாஜி ஓர் ஊழல்வாதி என்று மக்களுக்குத் தெரியும். அமைச்சரவையை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது முதல்வரின் கடமை. அவர் அதனை செய்யவில்லை. முதல்வர், அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன… செந்தில் பாலாஜி மீது சார்ஜ் சீட் பதிவுசெய்யும் வரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, விசாரணை முடிந்த பின்னர் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளலாமே.. அதை ஏன் முதல்வர் செய்யவில்லை… ஆ.ராசா தொடர்புடைய வழக்கில், கருணாநிதி அவர்கள் இவ்வாறுதான் செய்தார். பா.ஜ.க, காங்கிரஸ் என்று பல கட்சிகள் இவ்வாறு செய்திருக்கின்றன. தனி மனிதனைப் பாதுகாக்க முழு அரசையும் களம் இறக்கியிருக்கிறார் முதல்வர்.
அமலாக்கத்துறையினரின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம் என்று அமைச்சர்கள் பலரும் கூறி வருகின்றனர். ஆனால் செந்தில் பாலாஜியின் தம்பியை இன்று காணவில்லை. தி.மு.க ஃபைல்ஸ், ஜூலை முதல் வாரத்தில் கோவையில் வெளியிடப்படும். எனது பாதயாத்திரையை ஜூலை 28-ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கவிருக்கிறோம். பாதயாத்திரையை தொடங்கி வைக்க அமித் ஷா வருகை தரவிருக்கிறார்” என்றார்.