புதுடெல்லி,
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று அறிவித்து இருந்தார். அமைச்சரை பதவி நீக்கும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை எனவும் இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இது தொடர்பாக கூறியிருந்தார். செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி கவர்னர் பிறப்பித்த உத்தரவிற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளார். கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவை கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்தார். அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையைப் பெறுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, அட்டர்னி ஜெனரலை நான் தொடர்பு கொண்டிருக்கிறேன். அவர் தனது கருத்தை தெரிவிக்கும் வரை, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கவர்னரின் அடுத்தடுத்த இந்த அதிரடிகளால் தமிழக அரசியல் களம் அனல் பறந்தது. டெல்லி வரை இது தொடர்பான விவாதங்கள் அதிகரித்தன. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிஷ் திவாரி இது தொடர்பாக கூறியிருப்பதாவது:- தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். கவர்னருக்கு அவரின் வரம்புகள் எதுவும் தெரியவில்லை. இது போன்ற அரசியல் அமைப்பு விதிகளை மீறும் செயல்களை கவர்னர் செய்து இருக்கக் கூடாது. தனது பொறுப்புகள் என்னவென்றும் அரசியல் அமைப்பு பற்றியும் கவனருக்கு தெரியவில்லை என்பதையே அவரது நடவடிக்கைகள் காட்டுகிறது” என்றார்.